வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இளைய தலைமுறையினருக்கும் சிறப்பான சேவை செய்வது அஞ்சல் துறைதான் திருச்சி மத்திய மண்டல தலைவர் அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் பெருமிதம்


வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இளைய தலைமுறையினருக்கும் சிறப்பான சேவை செய்வது அஞ்சல் துறைதான் திருச்சி மத்திய மண்டல தலைவர் அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் பெருமிதம்
x
தினத்தந்தி 17 March 2021 2:17 AM IST (Updated: 17 March 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இளைய தலைமுறையினருக்கும் சிறந்த முறையில் சேவையாற்றுவது அஞ்சல்துறைதான் என்று மத்திய மண்டல தலைவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.


திருச்சி, 
வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இளைய தலைமுறையினருக்கும் சிறந்த முறையில் சேவையாற்றுவது அஞ்சல்துறைதான் என்று மத்திய மண்டல தலைவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

புதிய துணை அஞ்சலகம்

திருச்சி தீரன் நகரில் அரசு போக்குவரத்து கழக பணி மனை அருகில் புதிய துணை அஞ்சலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. திருச்சி கோட்ட முதல் நிலை கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன் தலைமை தாங்கினார். ஆர்.எம்.எஸ். முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் மைக்கேல்ராஜ் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் திருச்சி மண்டல அஞ்சல்துறை தலைவர் அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் பங்கேற்று, புதிய துணை அஞ்சலகத்திற்கான கல்வெட்டை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். இதில் தீரன் நகர் அஞ்சலக அதிகாரி ஜெயந்தி, நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணவேணி மற்றும் பாரதியார் மக்கள் நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திருச்சி மண்டல அஞ்சல்துறை தலைவர் அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் பேசியதாவது:-

செல்வமகள் திட்டம்

தபால் நிலையம் மூலமாக கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான ‘செல்வமகள்’ திட்டம் செயல்பட்டு வருகிறது. அஞ்சலகத்தில் அதிக பட்ச வட்டி அத்திட்டத்திற்குத்தான் அளிக்கப்படுகிறது. இத்திட்டம் வங்கியிலும் செயல்பாட்டில் உள்ளது. இருப்பினும் வங்கிகளை விட 10 மடங்கு அதிகமாக அஞ்சலகங்களில்தான் அச்சேவை ஓபன் செய்யப்பட்டுள்ளது. அதற்கு காரணம், அஞ்சல்துறை ஊழியர்கள் மட்டுமல்ல. பொதுமக்கள் அளித்த பேராதரவுதான்.

அந்த காலத்தில் அஞ்சலகத்தில் இருந்து வரும் தபால்களை, படிக்க தெரியாதவர்களுக்கு தபால்காரர்களே படித்து காண்பிக்கும் அந்த சேவை இன்றும் தொடர்கிறது. என்னதான் எலக்ட்ரானிக் உலகம் வந்து விட்டாலும் மனிதநேயத்துடன் செயலாற்றக்கூடிய ஊழியர்கள் அஞ்சலகத்தில் உள்ளனர். இது பொதுமக்களுக்கும், எங்களுக்கும் இடையே உள்ள பந்தத்தை உறுதி செய்வதாக உள்ளது.

இளைய தலைமுறையினர்

மேலும் அஞ்சலகத்தில் ஆதார் சேவையில் முதன்மையாக உள்ளது. புதிய ஆதார் அட்டை பெறுவதற்கும், திருத்தங்கள் செய்யவும் அஞ்சலகத்தின் சேவை சிறப்பாக உள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் வங்கிகள் மூடப்பட்ட நிலையில் ஏ.டி.எம்.கள் செயல்பட வில்லை. அந்த வேளையில், அஞ்சலக ஊழியர்கள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் ரூ.10 ஆயிரம் வரை பணம் பட்டுவாடா வீடு தேடி சேவை செய்யப்பட்டது.

ஆனால், இன்றைய தலைமுறையினர் அஞ்சலகங்களுக்கு ஏன் போக வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர். வயதானவர்களுக்கும், பென்சன் தாரர்களுக்கும் மட்டும்தான் தபால்துறை உள்ளதாக நினைக்கிறார்கள். அது தவறு. இன்றைய தலைமுறையினருக்கும் சிறப்பான சேவையை அஞ்சலகங்கள் செய்து வருகிறது. அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எந்த வங்கியின் ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்கலாம். அதற்கு சேவை வரி ஏதும் கிடையாது. இன்ஸ்டர்ன் மணியார்டர் வசதி சேவை உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story