திசையன்விளை அருகே கோவிலில் ஐம்பொன் சிலை கொள்ளை
திசையன்விளை அருகே கோவிலில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அழகப்பபுரத்தில் வட பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
கருவறை பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த 3½ அடி உயரம் உள்ள ஐம்பொன்னால் ஆன பத்திரகாளியம்மன் சிலை மற்றும் வெள்ளி வேல் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். கொள்ளை போன ஐம்பொன் சிலையின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாகி வெங்கடாச்சலம் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களும் வந்து, அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். பின்னர் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. அது கொள்ளை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அம்பை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள சின்ன சங்கரன்கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்்கோவிலில் ஒவ்வொரு கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் மாதப்பிறப்பன்று இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார மக்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் உள்ளே புகுந்து அம்பாள் சன்னதி கதவிலுள்ள பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துள்ளனர். அதன்பிறகு கோவிலில் உள்ள 6 உண்டியல்களில் முக்கியமான நான்கு உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் முருக சுவாமிநாதன், அம்பை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story