தமிழகம் வளர்ச்சி அடைய பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரியுங்கள்; மத்திய மந்திரி வி.கே.சிங் வேண்டுகோள்
தமிழகம் வளர்ச்சி அடைய பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங் கூறினார்.
நெல்லை:
மத்திய சாலை போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங் நெல்லை சந்திப்பில் உள்ள பா.ஜனதா கட்சி தேர்தல் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஒரு குடும்ப கட்சி, அந்த கட்சி ஒரு குடும்பத்தால் நடத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் ரவுடிசம், ஊழல் உள்ளிட்டவை நடந்து வந்தது. எனவே தமிழகம் வளர்ச்சி அடைய, தமிழகத்தின் அமைதியை கருத்தில் கொண்டு பா.ஜனதா கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மத்திய அரசின் திட்டங்களில் நகலெடுத்ததை போல உள்ளது. மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு வேளாண் மக்களுக்கு இணையாக மீனவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஆழ்கடல் மீன் பிடித்தலுக்கு பல சலுகைகள் கூடுதலாக வழங்கப்பட்டு நீலப்புரட்சியை ஏற்படுத்தி வருகிறோம்.
தி.மு.க.வில் இருந்து பலர் பா.ஜனதாவில் இணைந்து வருகின்றனர். பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலைகளை ஜி.எஸ்.டி. வரிக்கு கீழ் கொண்டுவந்தால் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது. மாநில அரசுகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது. தமிழகத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளது. அகில இந்திய அளவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
நிலையான ஆட்சி தமிழகத்திற்கு தேவைப்படுவதால் தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். ஒரு சில தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை, இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார்கள். தேசிய தலைவர்கள் விரைவில் தமிழக பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story