கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை விவசாயிகள் சிறைபிடிப்பு
சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்தனர்.
சென்னிமலை
சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்தனர்.
கான்கிரீட் தளம்
கீழ்பவானி வாய்க்காலை நவீனப்படுத்தும் வகையில் கான்கிரீட் தளம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து இதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றினால் வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் நீர் செரிவூட்டுவது நின்று விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் வறட்சியும் ஏற்படும் என கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் இந்த திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க பயன்படும் சிமெண்ட் பலகைகள் தயாரிப்பதற்கான எந்திரங்களை நிறுவுவதற்காக சென்னிமலை அருகே தலவுமலை பகுதியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை பொக்லைன் எந்திரம் மூலம் சமன்படுத்தும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
சிறைபிடிப்பு
இதுபற்றி அறிந்ததும் முருங்கத்தொழுவு ஊராட்சி முன்னாள் தலைவர் மு.ரவி, பனியம்பள்ளி ஊராட்சி முன்னாள் தலைவர் பி.சிவக்குமார் ஆகியோருடன் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் நேற்று காலை 9.30 மணியளவில் அங்கு சென்று பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து பணிகளை தடுத்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன் (சென்னிமலை), சண்முகசுந்தரம் (அறச்சலூர்) ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அரசு உத்தரவு
அப்போது விவசாயிகள் தரப்பில் கூறும்போது, கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க பயன்படுத்தப்படும் சிமெண்டு பலகைகள் தயாரிக்கும் எந்திரங்களை நிறுவுவதற்காக இங்கு நிலத்தை சமன் செய்வதற்காக கூறுகிறார்கள்.
எங்களுக்கு இதற்கான அரசு உத்தரவை பொதுப்பணி துறையினர் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதன்பிறகு பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி பொறியாளர்கள் ஜெயச்சந்திரன், சபரிநாதன் ஆகியோர் அங்கு வந்து, இதற்கான அரசு உத்தரவை ஓரிரு நாட்களில் தருவதாக உறுதியளித்தனர்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த விவசாயிகள், தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை எந்த பணியையும் செய்யக்கூடாது என வலியுறுத்தினார்கள்.
கடைமடை விவசாயிகள்
அதைத்தொடர்ந்து அங்கு பணிகள் நிறுத்தப்பட்டது. மேலும் இது சம்பந்தமாக ஈரோடு கலெக்டரிடம் மனு கொடுக்க விவசாயிகள் முடிவு செய்தனர்.
கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும் போதே கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் கடைமடை பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் 20 பேர் அங்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் அங்கிருந்து திருப்பி அனுப்பினார்கள்
Related Tags :
Next Story