பண்ணாரி அம்மன் கோவிலில் எளிய முறையில் நடந்த பூச்சாட்டு விழா- குண்டம் இறங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை
பண்ணாரி அம்மன் கோவிலில் எளிய முறையில் பூச்சாட்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு குண்டம் இறங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்
பண்ணாரி அம்மன் கோவிலில் எளிய முறையில் பூச்சாட்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு குண்டம் இறங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பண்ணாரி அம்மன்
பண்ணாரியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் குண்டம் விழா நடைபெறும். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு குண்டம் இறங்கி வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாக குண்டம் விழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும் குண்டம் விழா நடைபெறுமா? என்று பக்தர்களிடையே கவலை ஏற்பட்டது.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை
இந்தநிலையில் குண்டம் விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. பழனிதேவி தலைமையில் நடைபெற்றது. இதில் அறநிலையத்துறை உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில், குண்டத்தில் பூசாரி மட்டுமே இறங்க வேண்டும். அதன்பிறகு குண்டத்தை மூடிவிடவேண்டும். குண்டத்தில் இறங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சிறப்பு பஸ்கள் இயங்காது. ஏற்கனவே உள்ள கடைகளை தவிர புதிய கடைகளுக்கு அனுமதி இல்லை. கலை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என்பன உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
பூ உத்தரவு
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கோவிலில் பூச்சாட்டு விழா மிக எளிமையாக நடைபெற்றது. வழக்கமாக பூச்சாட்டு விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு நடந்த பூச்சாட்டு விழாவில் காளி திம்பத்தில் உள்ள 20 பேர் மட்டுமே பங்கேற்றார்கள்.
முன்னதாக கோவிலை சுற்றியுள்ள மாதேஸ்வரா, சருகு மாரியம்மன், வண்டி முனியப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பிறகு கோவிலில் பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து குண்டம் விழா நடத்த அம்மனிடம் பூ வைத்து உத்தரவு கேட்கப்பட்டது. உத்தரவு கிடைத்ததால் குண்டம் விழாவை எளிமையாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கட்டுப்பாடுகள்
இதேபோல் ஈரோடு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'வருகிற 29-ந் தேதி இரவு 8 மணி முதல் 30-ந் தேதி காலை 6 மணி வரை கோவில் வளாகத்துக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருவிழா நடைபெறும் நாளன்று பக்தர்கள் தங்குவதற்கு அனுமதியில்லை. வருகிற 23-ந் தேதி வரை கிராமங்களில் நடைபெறும் அம்மன் திருவீதி உலா ரத்து. சளி, காய்ச்சல் இருப்பவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்கவேண்டும். மேலும் விழாவின்போது பக்தர்கள் வேல் எடுத்து வருதல், அக்னி சட்டி எடுத்து வருதல், பறை, மத்தளம், அடித்து வருதல் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை' என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story