அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி பகுதிகளில் வியாபாரிகளிடம் ரூ.9½ லட்சம் பறிமுதல்- தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி
அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் வியாபாரிகளிடம் இருந்து ரூ.9½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.
ஈரோடு, மார்ச்.17-
அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் வியாபாரிகளிடம் இருந்து ரூ.9½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.
வாகன சோதனை
சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுவதையொட்டி தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் யாராவது கொண்டு சென்றால் அதை பறிமுதல் செய்கிறார்கள்.
இந்தநிலையில் அந்தியூர் மேட்டூர் ரோட்டில் அண்ணாமலை என்ற இடத்தில் பறக்கும் படை அதிகாரி பழனிசாமி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினார்கள்.
வாழைக்காய் வியாபாரி
அப்போது அந்த வழியாக ஒரு லாரி வந்தது. அந்த லாரியை நிறுத்திய அதிகாரிகள் அதில் பயணம் செய்த கணக்கம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 34) என்பவரிடம் சோதனை நடத்தினார்கள். அவரிடம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது. அவர் தான் வாழைக்காய் வியாபாரி என்றும், வாழைக்காய் விற்ற பணத்தை கொண்டு செல்வதாகவும் கூறினார். ஆனால் அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதனால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை அந்தியூர் தாசில்தார் வீரலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் ஆகியோரிடம் ஒப்படைத்தார்கள். மேலும் உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுச்செல்லுமாறு சக்திவேலிடம் கூறினார்கள்.
ஆட்டு வியாபாரி
இதேபோல் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் எஸ்.ஆர்.டி. கார்னர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது சரக்கு வேன் ஒன்று அந்த வழியாக வந்தது. அதை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தார்கள். அப்போது சரக்கு வேனில் பயணம் செய்த கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த சுப்பிரமணி (34) என்பவரிடம் 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் இருந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கேட்டபோது அவர்தான் ஒரு ஆட்டு வியாபாரி என்றும், சத்தியமங்கலம் வாரச்சந்தையில் ஆடுகள் வாங்க வந்ததாகவும் கூறினார். ஆனால் பணத்துக்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதனால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல்செய்து பவானிசாகர் தொகுதி தேர்தல் அதிகாரி ரவிசங்கரிடம் ஒப்படைத்தார்கள். அவர் பணத்தை கருவூலத்தில் செலுத்தினார்.
பண்ணாரி சோதனை சாவடி
சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மகாலிங்கம், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தனபால் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சரக்கு வேனில் வந்தவரிடம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணயில், ‘அவர் கர்நாடக மாநிலம் மைசூருைவ சேர்ந்த சபீர் அஹமத் என்பதும், கோவையில் ஆடு வியாபாரம் செய்துவிட்டு அந்த பணத்தை கொண்டு சென்றதும்,’ தெரியவந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அதிகாரி ரவிசங்கரிடம் ஒப்படைத்தனர்.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஜெகநாதன், குமரவேல் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நடத்திய வாகன சோதனையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே சுண்டக்காட்டுப்பட்டியை சேர்ந்த மரவள்ளி கிழங்கு வியாபாரியான ரஜினி என்பவர் கொண்டு வந்த ரூ.1 லட்சம், கணபதிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நடத்திய வாகன சோதனையில் கொடுமுடியை அடுத்த பனப்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர் கொண்டு வந்த செல்போன் கடையிலான ரூ.60 ஆயிரம் ஆகியவை உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் மொடக்குறிச்சியை அடுத்த ஆனைக்கால்பாளையம் ரிங் ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மூர்த்தி மற்றும் அதிகாரிகள் குழுவினர் நடத்திய வாகன சோதனையில் ஈரோடு சோலார் பகுதியை சேர்ந்த பட்டேல் விஷால்குமார் என்பவர் காரில் கொண்டு வந்த ரூ.57 ஆயிரம், அறச்சலூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சண்முகம் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நடத்திய வாகன சோதனையில் பவானியை சேர்ந்த வியாபாரியான துளசிமணி என்பவர் கோழி வாங்குவதற்காக கொண்டு வந்த ரூ.97 ஆயிரம் ஆகியவை உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்தியூர், சத்தியமங்கலம் மற்றும் மொடக்குறிச்சி பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் வியாபாரிகளிடம் இருந்து மொத்தம் ரூ.9 லட்சத்து 42 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story