தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு


தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 17 March 2021 12:45 AM GMT (Updated: 17 March 2021 12:47 AM GMT)

தொழிலாளியை கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கிருஷ்ணகிரி,

திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் பழனி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி விருதம்மாள் (வயது 49). இவர் திருவண்ணாமலை மாவட்டம் கரிக்காலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர். கணவன்-மனைவி 2 பேரும் திருப்பூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் பழனி உடல் நலம் பாதிக்கப்பட்டார். அப்போது விருதம்மாள் தனது உறவினர் செல்வியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். அவர் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள ஏ.ரெட்டிப்பட்டியை சேர்ந்த ராஜி (55) என்பவருடன் விருதம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதனால் விருதம்மாள் அடிக்கடி ராஜியுடன் செல்போனில் பேசி வந்தார். இது பழனிக்கு பிடிக்கவில்லை. இதனால் பழனி, அவரது மனைவி விருதம்மாள் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் பழனி மனைவியை கொடுமைப்படுத்தினார்.  இதுகுறித்து விருதம்மாள், ராஜியிடம் கூறினார். 

இந்த நிலையில் கடந்த 24.02.2009 அன்று சித்த வைத்தியரை பார்ப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள சென்றாயன் மலை கோவில் பக்கமாக பழனியும், அவரது மனைவி விருதம்மாளும் வந்தனர். அப்போது மாவத்தூர் பிரிவு ரோடு அருகில் ராஜியும், விருதம்மாளும் சேர்ந்து பழனியை கழுத்தை நெரித்து கொலை செய்து, தலையில் கல்லை போட்டு விட்டு சென்றனர்.

இதுகுறித்து கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ராஜியும், விருதம்மாளும் போலீசில் சரண் அடைந்தனர். இது தொடர்பாக ஏ.ரெட்டிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் உமாபதி கொடுத்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விருதம்மாள், ராஜி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமாரி நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி விருதம்மாளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ராஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் எம்.பாஸ்கர் ஆஜர் ஆகி வாதாடினார்.

Next Story