துறையூரை அடுத்த பச்சைமலையில் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி மலைவாழ் மக்களிடம் ஓட்டு வேட்டை
துறையூரை அடுத்த பச்சைமலையில் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி மலைவாழ் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
துறையூர்,
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. துறையூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான இந்திராகாந்தி தங்கமணி பச்சை மலையில் உள்ள கிராமங்களான வண்ணாடு, கோம்பை பகுதியில் மலைவாழ் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு வெற்றி திலகமிட்டு மலைவாழ் மக்கள் அவரை வரவேற்றார்கள்.
அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
அம்மாவின் ஆசியுடன் கழக ஆட்சியில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்காக சாலை வசதி அதிக அளவில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மலைவாழ் மக்களின் பிரதான கோரிக்கையான மரவள்ளிக்கிழங்கு தொழிற்சாலை மற்றும் பச்சை மலையில் உள்ள கிராமங்களை இணைத்து தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைய செய்யுங்கள். கழக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், மலைவாழ் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்த முந்திரி கொள்முதல் நிலையம் மற்றும் அவற்றை பதப்படுத்த நவீன வசதிகளுடன்கூடிய கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன் பின்பு பச்சை மலையில் உள்ள கிராம மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். டாப் செங்காட்டுப்பட்டி யில் விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து 21 நபர்கள் விலகி அ.தி.மு.க.வில் இந்திராகாந்தி தங்கமணி முன்னிலையில் இணைந்தார்கள். அவர்களை பொன்னாடை அணிவித்து அவர் வரவேற்றார். அப்போது துறையூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சேனை செல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், திருச்சி வடக்கு மாவட்ட விவசாய அணி மாவட்டசெயலாளர் பொன் காமராஜ் மற்றும் கட்சி தொண்டர்கள், கழக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story