மக்கள் சேவை தொடர ஆதரவு தாருங்கள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள்


மக்கள் சேவை தொடர ஆதரவு தாருங்கள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 17 March 2021 4:15 PM IST (Updated: 17 March 2021 4:04 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் சேவை தொடர வாக்காளர்கள் எனக்கு 2வது முறையாக ஆதரவு தர வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரூர்,

கரூர் பிரேம் மஹாலில் அ.தி.மு.க. செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடந்தது. இதில் கரூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பான சாதனை விளக்க புத்தகத்தினை கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நாலரை ஆண்டுகாலம் இருந்துகொண்டு இன்று ஜெயலலிதாவின் திட்டங்களையெல்லாம் நான்தான் கொண்டு வந்தேன் என ஒருவர்( செந்தில்பாலாஜி) பேசிக்கொண்டு வருகிறார். அவர் எனது சொத்துப்பட்டியலை வெளியிடுவேன் என்று கூறுகிறார். நான் எனது சொத்து பட்டியலை தாக்கல் செய்து விட்டேன். நான் மட்டுமல்ல எனது குடும்பமே கடந்த 25 ஆண்டுகளாக வருமானவரி செலுத்தி வருகின்றனர். 6 தொழில் செய்துகொண்டிருக்கிறேன். நான் நேர்மையாக இருந்து கணக்கு காட்டி உள்ளேன். ஆனால், தாங்கள்(செந்தில்பாலாஜி) பல வழக்குகளை சந்தித்து வருகிறீர்கள்.

கரூரின் மையப்படுதியில் ரூ.306 கோடி செலவில் பிரமாண்டமான மருத்துவக்கல்லூரி அமைத்துள்ளோம். அதற்கு நீங்கள் சொந்தம் கொண்டாட முடியாது. கருணாநிதி ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் தருவதாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி விட்டனர். அவர்களால் ஒருபோதும் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். 

ஆகவே, உங்களுக்கு மீண்டும் சேவை செய்ய எனக்கொரு வாய்ப்பு தாருங்கள். முதல்அமைச்சர் எடப்பாடியின் நல்ல திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்திட 2வது முறையாக என்னை வெற்றிபெறச் செய்யுங்கள். அதற்காக நீங்கள் தீவிரமாக களப்பணியாற்றுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மு.தம்பிதுரை எம்.பி., கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதாமணிவண்ணன் மற்றும் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story