சென்னை புறநகர் பகுதிகளில் வாகன சோதனை: உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.3 கோடி தங்க, வெள்ளி நகைகள் பறிமுதல் - 28 லட்சம் பணமும் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது
சென்னை புறநகர் பகுதிகளில் வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3 கோடி தங்க, வெள்ளி நகைகளும், ரூ.28லட்சமும் சிக்கியது.
ஆலந்தூர்,
வேளச்சேரி தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுசிலா மற்றும் அலுவலர்கள் வேளச்சேரியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேளச்சேரியில் உள்ள தனியார் நகைக் கடைக்கு சொந்தமான ஒரு வேன் வந்தது. அதனை சோதனை செய்தபோது, ரூ.3 கோடி மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள் இருந்தன. ஊழியர்கள் உரிய ஆவணங்களை காட்டாததால் தேர்தல் பறக்கும் படையினர் நகைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் அதே போல், சென்னையை அடுத்த சோழிங்கநல்லுார் தொகுதிக்குட்பட்ட துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தமிழரசன் தலைமையில் அலுவலர்கள் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வந்த வாகனம் ஒன்றில் நடத்திய சோதனையில் உரிய ஆணவங்களின்றி ரூ.13 லட்சம் கொண்டு சென்றதை கண்டுபிடித்தனர். இது குறித்து வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் பெரிய நிறுவனங்களின் சார்பாக தொகை வங்கியில் செலுத்த சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து ரூ.13 லட்சத்தை பறிமுதல் செய்து சோழிங்கநல்லூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி லட்சுமணனிடம் ஒப்படைத்தனர்.
இந்தநிலையில், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் தாசில்தார் அருண்குமார் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த 2 வாகனங்களை மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது, 2 வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.4 லட்சத்து 13 ஆயிரம் மற்றும் திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் நிலத்தை பத்திர பதிவு செய்துவிட்டு உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.5 லட்சம் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதே போல் சென்னை திருவொற்றியூர் எம்.ஆர்.எப்.தொழிற்சாலை சந்திப்பில் மண்டல உதவி செயற்பொறியாளர் முரளி தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எண்ணூரில் இருந்து வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது, காரின் பின்புறத்தில் உரிய ஆவணமின்றி ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்து 500 இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த லோகேஷ் குமார் (வயது 24) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர். .இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து, பொன்னேரி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.சென்னை அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிவேல் மற்றும் போலீசார் நேற்று ஐ.சி.எப். காலனி குடிசை வாரியம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், ரூ.3 லட்சம் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், உரிய ஆவணமின்றி பணத்தை கொண்டு வந்த அவர் அதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் (வயது 33) என்பதும், சலூன் கடை வைத்திருக்கும் அவர், நகை வாங்க தியாகராய நகர் செல்வதாகவும் கூறினார். அதைத்தொடர்ந்து, ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், தாசில்தார் செந்தாமரை செல்வியிடம் ஒப்படைத்தனர்.
சென்னை புறநகரில் தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில் நேற்று மட்டும் ரூ.3 கோடி நகைகள் மற்றும் ரூ.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story