தூத்துக்குடி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 2674 பேர் தபால் ஓட்டுப்போட விண்ணப்பம்


தூத்துக்குடி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 2674 பேர் தபால் ஓட்டுப்போட விண்ணப்பம்
x
தினத்தந்தி 17 March 2021 6:52 PM IST (Updated: 17 March 2021 6:52 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 2674 பேர் தபால் ஓட்டுப்போட விண்ணப்பித்துள்ளனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 2 ஆயிரத்து 674 பேர் தபால் ஓட்டு போட விண்ணப்பித்து உள்ளனர்.
சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளில் விருப்பம் உள்ளவர்கள் தபால் ஓட்டு போடலாம் என்று அறிவித்தது. தேர்தல் அறிவிக்கை வெளியிட்ட நாளில் இருந்து 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட முதியவர்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரில் சந்தித்து அவர்களின் விருப்பத்தை அறியவும், 12டி படிவத்தை பூர்த்தி செய்து பெறவும் அறிவுறுத்தி இருந்தது.
முதியவர்கள்
அதன்படி மாவட்டம் முழுவதும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 29 ஆயிரம் பேரும், மாற்றுத்திறனாளிகள் 11 ஆயிரம் பேரும் கண்டறியப்பட்டனர். அவர்களை அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக சந்தித்து விருப்பத்தை அறிந்தனர். நேற்று முன்தினம் வரை அந்த பணி நடந்து வந்தது. இதில் மாவட்டம் முழுவதும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 2 ஆயிரத்து 674 பேரும், மாற்றுத்திறனாளிகள் 827 பேரும், அத்தியாவசிய பணியில் உள்ள 2 பேரும் ஆக மொத்தம் 3 ஆயிரத்து 503 பேர் தபால் ஓட்டு போடுவதற்கு விருப்பம் தெரிவித்து 12டி படிவம் பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர்.
இவர்களுக்கு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பிறகு, தபால் ஓட்டுக்கள் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாக கொண்டு சென்று ஓட்டுக்களை பெற உள்ளனர். இதனால் அரசியல் கட்சியினர் தற்போதே, முதியவர்களின் ஓட்டுக்களை பெறுவதற்கான தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். விருப்பம் தெரிவித்து உள்ள முதியவர்களின் விவரங்களை சேகரிக்கத் தொடங்கி உள்ளனர்.

Next Story