3-ம் நாளான நேற்று சென்னை புறநகர் தொகுதிகளில் 7 பேர் மட்டுமே மனு தாக்கல்
சென்னை புறநகருக்குட்பட்ட 9 தொகுதிகளில் போட்டியிட 3-ம் நாளான நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய 7 பேர் மட்டுமே வந்தனர்.
சென்னை,
சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு கடந்த 12-ந்தேதி தொடங்கி, வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 3-ம் நாளான நேற்று சென்னை புறநகர் பகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் அம்பேத்கர் மக்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ரமேஷ்குமார், சுயேச்சை வேட்பாளர் பிரவீனா உள்ளிட்ட 2 பேர் திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தேவேந்திரனிடம் மனு தாக்கல் செய்தனர்.
பூந்தமல்லி (தனி) சட்டமன்ற தொகுதியில் மை இந்தியா பார்டி சார்பில் பவுசியா காயத்ரி என்பவர் நேற்று பூந்தமல்லி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரீத்தி பார்கவியிடம் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதையடுத்து மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் பத்மபிரியா நொளம்பூரில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவனிடம் வேட்பு மனுவை தாக்கல் வந்தார். அப்போது, அதற்கான டெபாசிட் தொகை வைத்திருந்த பையை அவரது உதவியாளரிடம் கொடுத்து விட்டு மறந்தபடி வந்து விட்டார்.
பின்னர் வெளியே வந்து டெபாசிட் தொகையை வாங்கி சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் மனு தாக்கல் செய்தனர். மாதவரம், ஆவடி, தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் நேற்று ஒருவர் கூட வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரவில்லை. திருவொற்றியூர், மதுரவாயல், பூந்தமல்லி, அம்பத்தூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் நேற்று 7 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்தனர்.
Related Tags :
Next Story