நள்ளிரவில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகள்


நள்ளிரவில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகள்
x
தினத்தந்தி 17 March 2021 10:01 PM IST (Updated: 17 March 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

முதுமலை ஊராட்சியில் நள்ளிரவில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளால் ஆதிவாசி மக்கள் பீதியில் உள்ளனர்.

கூடலூர்,

முதுமலை ஊராட்சியானது புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ளது. இங்கு முதுகுளி, நாகம்பள்ளி, மண்டக்கரா, புலியாளம், கோழிமலை உள்பட பல்வேறு குக்கிராமங்கள் இருக்கின்றன. இதில் ஆதிவாசி மக்கள் மற்றும் மவுண்டாடன் செட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். 

அடர்ந்த வனப்பகுதியின் எல்லையில் முதுமலை ஊராட்சி உள்ளதால், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கோழிமலை உள்பட சில குக்கிராமங்களில் நள்ளிரவில் காட்டுயானைகள் புகுந்து வருகின்றன. 

இதனால் ஆதிவாசி மக்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு கூட வெளியே வர முடியாத நிலை காணப்படுகிறது.

அந்த கிராமங்களில் காட்டுயானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க முதுமலை வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அப்போது ஊருக்குள் வரும் காட்டுயானைகளை விரட்டியடிக்கின்றனர். ஆனால் காட்டுயானைகள் தொடர்ந்து ஊருக்குள் வருவதை தடுக்க முடியவில்லை.

இதுகுறித்து முதுமலை ஊராட்சி ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-
காட்டுயானைகள் ஊருக்குள் வரும் இடங்களில் புதிதாக அகழிகள் தோண்ட வேண்டும். ஏற்கனவே தோண்டி உள்ள அகழிகளை முறையாக ஆழப்படுத்த வேண்டும்.

வனத்துறையினர் இரவில் கண்காணித்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது அங்கிருந்து செல்லும் காட்டு யானைகள் வேறு கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் எந்த நேரத்தில் காட்டுயானைகள் வரும் என்ற பீதியுடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story