முக கவசம் அணியாதவர்களை கண்காணிக்க குழுக்கள்


முக கவசம் அணியாதவர்களை கண்காணிக்க குழுக்கள்
x
தினத்தந்தி 17 March 2021 10:14 PM IST (Updated: 17 March 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

முக கவசம் அணியாதவர்களை கண்காணிக்க குழுக்கள்

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் முக கவசம் அணியாதவர்களை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரள மாநிலத்தில் தொற்று வேகமாக பரவி வருவதால், அங்கிருந்து வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று ஊட்டி எச்.பி.எப்., தலைகுந்தா ஆகிய பகுதிகளில் இருசக்கர, நான்கு சக்கர வாகனம் மற்றும் பஸ்களில் பயணம் செய்யும் நபர்கள் முக கவசம் அணிந்து உள்ளார்களா? என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கண்காணிப்பு குழுக்கள்

அப்போது முக கவசம் அணியாத நபர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து, கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

இதேபோல் ஒரு உணவகத்தில் இருந்து சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த கேரள சுற்றுலா பயணிகள் முக கவசம் அணியாமல் இருந்ததை பார்த்தார். தொற்று பரவும் அபாயம் உள்ளதால், அவர்களுக்கு அபராதம் விதிக்கும்படி அலுவலர்களிடம் கூறினார். பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது முக கவசம் அணிந்து செல்கிறார்களா? என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 

கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக கவசம் அணியாத நபர்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

உறுதி செய்ய வேண்டும்

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அரசு பஸ்களில் பயணிகள் ஏறும் போது முக கவசம் அணிந்து உள்ளார்களா? என்று நடத்துனர் கண்காணித்து, உறுதி செய்த பிறகு பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

உணவகங்களுக்கு வருபவர்கள் உணவு சாப்பிட்டு வெளியே செல்லும் போது மீண்டும் முக கவசம் அணிந்து செல்லுமாறு தெரிவிக்க உணவக உரிமையாளர்கள் ஒரு நபரை பணியில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story