அரசு நெறிமுறைகளை பின்பற்றாத தொழில் நிறுவனங்களுக்கு அபராதம்
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், அரசு நெறிமுறைகளை பின்பற்றாத தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல்:
கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் சுற்றுலா தலங்கள், கோவில்கள் ஆகியவற்றில் அரசு வகுத்த கொரோனா நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மாவட்டத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று கலெக்டர் விஜயலட்சுமி அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்.
அதன்படி நேற்று சின்னாளபட்டியில் செயல்படும் ஒரு தொழில் நிறுவனத்தை அவர் ஆய்வு செய்தார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று நிறுவன உரிமையாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும் அரசு நெறிமுறைகளை பின்பற்றாத தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ஆய்வின் போது, சுகாதார பணிகள் துணை இயக்குனர் நளினி, மருத்துவ அலுவலர் பரத் கண்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story