கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் உள்பட 34 பேர் வேட்பு மனு தாக்கல்
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று அதிமுக, திமுக வேட்பாளர்கள் உள்பட 34 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
கடலூர்,
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த 12-ந்தேதி முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி (தனி), புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி), குறிஞ்சிப்பாடி ஆகிய 9 தொகுதிகளிலும் இது வரை 28 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றும் வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. மாற்று வேட்பாளராக தங்கமணி, தி.மு.க. சார்பில் மாற்று வேட்பாளராக லீமா ரோஸ், நாம் தமிழர் கட்சி கடல்தீபன் என்கிற ஜலதீபன், பகுஜன் சமாஜ் கட்சி வள்ளல்குமார், தேசிய மக்கள் சக்தி கட்சி ராஜராஜன், சுயேச்சையாக தங்கமணி, தீனதயாளன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகதீஸ்வரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல்ரகுமான், அண்ணா புரட்சி தலைவா் அம்மா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளா் முனிசங்கர், அனைத்து மக்கள் புரட்சி கட்சி உதயசெல்வன், சுயேச்சையாக நாராயணமூர்த்தி, புருஷோத்தமன் ஆகிய 5 பேரும் தேர்தல் நடத்தும் அலுவலர் மதுபாலனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
புவனகிரி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் துரை.கி.சரவணன் தேர்தல் நடத்தும் அலுவலர் உதயகுமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் செல்விராமஜெயம், மாற்று வேட்பாளர் முத்துலிங்கம், நாம் தமிழர் கட்சி சுமதி, அண்ணா திராவிடர் கழகம் முத்துக்கிருஷ்ணன் ஆகிய 4 பேரும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் சொரத்தூர் ராஜேந்திரன், மாற்று வேட்பாளராக ஜானகிராமன், தே.மு.தி.க. சிவக்கொழுந்து, நாம் தமிழர் கட்சி சுபாஷினி ஆகியோரும் தேர்தல் நடத்தும் அலுவலர் மங்களநாதனிடம் மனு தாக்கல் செய்தனர். நெய்வேலியில் அ.ம.மு.க. வேட்பாளர் பக்தரட்சகன், மாற்று வேட்பாளராக லட்சுமி ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் அர்ச்சுணன் தேர்தல் நடத்தும் அலுவலர் லூர்து சாமியிடம் மனு தாக்கல் செய்தார். விருத்தாசலத்தில் அ.ம.பு.க. சத்தியநாதன், தமிழ்நாடு இளைஞர் கட்சி கேவசபெருமாள், சுயேச்சையாக நீதிராஜன், ராஜேந்திரன், பெருமாள் ஆகியோரும், திட்டக்குடியில் தி.மு.க. சார்பில் மாற்று வேட்பாளராக பவானி, நாம் தமிழர் கட்சி காமாட்சி, பா.ஜ.க. பெரியசாமி, சுயேச்சையாக சீனுவாசன், கருப்பன் ஆகியோரும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
நேற்று 34 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை (வெள்ளிக்கிழமை) வரை மனு தாக்கல் நடக்கிறது. அதன்பிறகு மனுக்கள் மீது பரிசீலனை 20-ந்தேதியும், மனுக்களை வாபஸ் பெற 22-ந்தேதி கடைசி நாள், அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
Related Tags :
Next Story