பெரியகுளத்தில் நஷ்டஈடு வழங்காததால் அரசு விரைவு பஸ் ஜப்தி


பெரியகுளத்தில் நஷ்டஈடு வழங்காததால் அரசு விரைவு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 17 March 2021 10:56 PM IST (Updated: 17 March 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு விரைவு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

பெரியகுளம்:
பெரியகுளம் தென்கரை இடுக்கடிலாட் தெருவை சேர்ந்தவர் சேக் இப்ராகிம் (வயது 48). இவர் கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு இவர் திண்டுக்கல் சாலையில் உள்ள காட்ரோடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு விரைவு பஸ், சேக் இப்ராகிம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். 
இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர், பெரியகுளம் கூடுதல் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் விபத்து நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, சேக் இப்ராகிம் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்து 72 ஆயிரத்தை நஷ்டஈடாக வழங்க அரசு விரைவு பஸ் போக்குவரத்துக்கழகத்துக்கு உத்தரவிட்டது. 
ஆனால் இதுவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் சார்பில் அதே கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி திலகம், அரசு விரைவு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று காலை பெரியகுளத்தில் நின்றிருந்த அரசு விரைவு பஸ்சை கோர்ட்டு அமீனா ரமேஷ் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார்.

Next Story