திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x
தினத்தந்தி 17 March 2021 11:04 PM IST (Updated: 17 March 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

திருக்கோவிலூர்

கொடியேற்றம்

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவகோவில்களில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நாளை மறுநாள்(சனிக்கிழமை) கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து தங்க தோளுக்கினியான் நிகழ்ச்சியும், மாலை ஹம்ச வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது. 

விழாவின் 2-வது நாளான 21-ந் தேதி காலை யாளி வாகனத்திலும், மாலை சிம்ம வாகனத்திலும் சாமி வீதி உலா, இரவு தங்கப் பல்லக்கு நிகழ்ச்சியும், 22-ந் தேதி(திங்கட்கிழமை) மாலை ஹனுமந்த வாகனத்திலும், 23-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை முத்துப்பந்தல் வாகனத்திலும், மாலை சேஷ வாகனத்திலும் சாமி வீதிஉலா நடக்கிறது. 

தேர் திருவிழா

24-ந் தேதி(புதன்கிழமை) காலை இந்திர விமானத்தில் சாமி வீதி உலா, இரவு கருட சேவையும், 25-ந் தேதி(வியாழக்கிழமை) காலை திருமஞ்சனமும், மாலை சந்திர பிரபை நிகழ்ச்சியும், இரவு யானை வாகனத்தில் சாமி வீதி உலா, 26-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை தங்க பல்லக்கு உற்சவமும், மாலை திருக்கல்யாணமும், இரவு முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.

27-ந் தேதி(சனிக்கிழமை) காலை தந்தப் பல்லக்கும், மாலை குதிரை வாகனமும் வேடுபறி உற்சவமும் நடக்கிறது. 28-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தேர் திருவிழா நடக்கிறது. மாலையில் சாமிக்கு தீர்த்தவாரி மற்றும் சாற்றுமுறை நிகழ்ச்சியும், இரவு அவரோகணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 

தெப்ப உற்சவம்

29-ந் தேதி(திங்கட்கிழமை) காலை தங்கப் பல்லக்கு நிகழ்ச்சியும் தொடர்ந்து மட்டையடி உற்சவமும், மாலை புஷ்பயாகமும், இரவு சப்தாவரணமும், 30-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை விடையாற்றி உற்சவமும், அதைத் தொடர்ந்து ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ ராகவேந்திரர் மடம் எழுந்தருளல் நிகழ்ச்சியும் மண்டகப்படியும், இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தே களிசபெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 

31-ந் தேதி(புதன்கிழமை) காலை விடையாற்றி நிகழ்ச்சியும், இரவு ஸ்ரீ சீதா லக்ஷ்மண ஹனுமத் சமேத ஸ்ரீ ராமபிரான் எழுந்தருளும் தெப்ப உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து அடுத்த மாதம்(ஏப்ரல்) 1-ந் தேதி காலை விடையாற்றி நிகழ்ச்சியும், ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலன் எழுந்தருளும் தெப்ப உற்சவமும் நடக்கிறது.  பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோவிலில் மின்விளக்குகளாலும், வாழை தோரணங்களாலும் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் மேற்பார்வையில் தேவஸ்தான ஏஜெண்ட் ஸ்ரீ கிருஷ்ணன் தலைமையில் விழாக் குழுவினர், உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story