80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டுக்கு ஆர்வம் காட்டவில்லை
80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டுக்கு ஆர்வம் காட்டவில்லை என்பதால் 10 சதவீதம் பேர் கூட விண்ணப்பிக்கவில்லை என அதிகாரி தெரிவித்தார்.
கோவை
80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டுக்கு ஆர்வம் காட்டவில்லை என்பதால் 10 சதவீதம் பேர் கூட விண்ணப்பிக்கவில்லை என அதிகாரி தெரிவித்தார்.
தபால் வாக்குகள்
தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று வாக்களிக்க பல்வேறு சிரமங்கள் உள்ளன.
அவர்கள் அனைவரும் மற்றவர்களின் துணையோடு தான் வாக்களிக்க முடியும் என்பதால் அவர்களின் வசதிக்காக தபால் வாக்குகள் அளிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. இதற்காக அவர்களிடம் இருந்து கோரிக்கை கடிதங்கள் பெறுமாறு அறிவிக்கப்பட்டது.
10 சதவீதம் பேர் கூட விண்ணப்பிக்கவில்லை
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 64 ஆயிரத்து 500 பேரும், மாற்று திறனாளிகள் 14 ஆயிரத்து 778 பேரும் என மொத்தம் 79 ஆயிரத்து 278 பேர் தபால் வாக்குகள் போடுவதற்கு தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தபால் வாக்குகளுக்கான விண்ணப்பம் அளிக்க நேற்று முன்தினம் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 7 ஆயிரத்து 500 பேர் தான் தபால் வாக்குகள் வேண்டும் என்று கோரி அந்தந்த பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் (பி.எல்.ஓ.) விண்ணப்பம் அளித்துள்ளனர்.
இதனால் கோவை மாவட்டத்தில் தபால் வாக்குகளுக்கு தகுதி வாய்ந்தவர்களில் 10 சதவீதம் பேர் அதாவது 7 ஆயிரத்து 900 பேர் கூட விண்ணப்பம் அளிக்கவில்லை.
இதனால் மற்றவர்கள் அனைவரும் நேரடியாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தனிக்குழு
தபால் வாக்குகள் போட வேண்டும் என்று கோரி விண்ணப்பம் அளித்தவர்களின் கடிதங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஓட்டுகள் இருக்கிறதா? என்று ஆய்வு செய்த பின்னர் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
கோவை மாவட்டத்தில் யார்-யார் தபால் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று உறுதி செய்த பின்னர் 50 வாக்குகளுக்கு ஒரு தனிக்குழு அமைக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் ஒரு வாக்குச்சாவடி அலுவலர், ஒரு வாக்குப்பதிவு அதிகாரி, போலீஸ்காரர் ஓருவர், தேர்தல் நுண் பார்வையாளர் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள்.
வாக்களிப்பது எப்படி?
அவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடியில் எப்படி ஓட்டுப்போடு வார்களோ அப்படி திரை அமைத்து அதன்பின்னர் வாக்களிப்பவர் நின்று தபால் வாக்கு பதிவு செய்யப்படும்.
இதற்கான வாக்குச்சீட்டுகள் வருகிற 26-ந் தேதி தயாராகி விடும். அது வந்த பின்னர் தபால் வாக்குகள் பதிவு செய்யப்படும் பணிகள் தொடங்கும். தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணிகள் 2 நாட்களில் முடிந்து விடும்.
மாற்று திறனாளிகள் ஏற்கனவே தேர்தல் கமிஷனின் பி.டபிள்யூ.-டி. என்ற செயலியில் பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்தவர்கள் தான் மாற்று திறனாளிகள் என்ற பிரிவில் தபால் வாக்களிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story