தி.மு.க. ஆட்சியில் நடந்த தவறுகளுக்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல தயாரா


தி.மு.க. ஆட்சியில் நடந்த தவறுகளுக்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல தயாரா
x
தினத்தந்தி 18 March 2021 12:08 AM IST (Updated: 18 March 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சியில் நடந்த தவறுகளுக்கு பதில் சொல்ல மு.க.ஸ்டாலின் தயாரா? என்று திருவாரூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாவல் விடுத்தார்.

தஞ்சாவூர்;
தி.மு.க. ஆட்சியில் நடந்த தவறுகளுக்கு பதில் சொல்ல மு.க.ஸ்டாலின் தயாரா? என்று திருவாரூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாவல் விடுத்தார்.
முதல்-அமைச்சர் பிரசாரம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சிவாராஜமாணிக்கத்தை ஆதரித்தும் மன்னார்குடியிலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து கூத்தாநல்லூர் மற்றும், திருவாரூர் பழைய பஸ் நிலையத்திலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. இந்த தேர்தலோடு காணாமல் போய் விடும் என்று ஸ்டாலின் சொல்கிறார். ஜெயலலிதா எனது மறைவுக்கு பின்னர் இந்த கட்சி, ஆட்சி 100 ஆண்டுகள் இருக்கும் என்றார். அதை இந்த தேர்தலில் நாங்கள் நிலை நாட்டுவோம். ஜெயலலிதா கண்ட கனவு, லட்சியத்தை அ.தி.மு.க. தொண்டர்கள் மூலம் நிச்சயம் நிறைவேற்றுவோம். திருவாரூர் தொகுதி  ஏற்றம் பெற பன்னீர்செல்வத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். இந்த முறை திருவாரூர் தொகுதியை அ.தி.மு.க கோட்டையாக மாற்றுங்கள்.
தக்க பதிலடி கொடுங்கள்
அ.தி.மு.க. இந்த தேர்தலோடு காணாமல் போய்விடும் என கூறுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுங்கள். நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து அ.தி.மு.க. அரசு செய்த சாதனைகளை பற்றி பேசி வருகிறேன். ஆனால் ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் என்னை பற்றி மட்டும் விமர்சனம் செய்து வருகிறார். டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தி.மு.க. ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. விவசாயிகள் நிலத்தை பிடுங்கி விடுவார்கள்  என அச்சமடைந்தனர். 
 எங்கள் நிலத்தை காப்பாற்றி கொடுங்கள் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றி முழு பாதுகாப்பு அளித்துள்ளோம். விவசாய நிலத்தை காப்பாற்றி கொடுத்தது எடப்பாடி பழனிசாமி தான்.
எதிர்க்கட்சி வரிசை
விவசாயிகள் பற்றி ஸ்டாலினுக்கு கவலை இல்லை. விவசாயத்தை பற்றியும் கவலை இல்லை.  2010-ம் ஆண்டு மத்தியில் இருந்தது காங்கிரஸ் ஆட்சி. அப்போது மத்திய ஆட்சியில் தி.மு.க.அங்கம் வகித்தது. அப்போது நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரசும், தி.மு.க.வும் தான். இதற்கு ஆதாரம் உள்ளது. அப்போது அவர்களுக்கு அதிகாரம் மட்டும் தான் கண்ணுக்குப்பட்டது. மக்களை பற்றி கவலை இல்லை.
ஜெயலலிதா நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்றார். அதன்அடிப்படையில்  விலக்கு பெற்றார். நாங்கள் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். ஆனால் ஸ்டாலின் பச்சைப்பொய் பேசுகிறார். அவர் எப்போதும் உண்மையை பேசுவது கிடையாது. உண்மையை மறைத்து பேச முடியாது. உண்மை வெளியே வந்து கொண்டு தான் இருக்கும். எனவே உண்மையை பேசுங்கள். அப்போது தான் எதிர்க்கட்சி வரிசையாவது கிடைக்கும்.
435 அரசு மாணவர்கள்
நீட் தேர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தால் ஏழை மாணவர்கள் டாக்டர் ஆக வேண்டும்் என்ற எண்ணத்தில் எனது சிந்தனையில் உதித்தது தான் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு. அதன்படி இந்த ஆண்டு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 435 பேர் மருத்துவபடிப்பில் சேர நடவடிக்கை எடுத்தேன். தற்போது 11 மருத்துவக்கல்லூரி புதிதாக கொண்டு வந்ததின் அடிப்படையில் அடுத்த ஆண்டு அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 600 பேர் டாக்டருக்கு படிக்க வாய்ப்பு கிடைக்கும். அவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசு செலுத்தும்.
நீட் தேர்வில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மாணவர்களுக்கு வாழ்வு கொடுத்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் அ.தி.மு.க. ஊழல் கட்சி என்கிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரேகட்சி தி.மு.க. தான். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த ஒரே கட்சி தி.மு.க. தான். எங்களை பார்த்து ஊழல் கட்சி என்று பேசுவதா? 2 ஜி அலைக்கற்றையில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்து இந்திய நாட்டுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியது தி.மு.க. தான்.
பதில் சொல்ல தயாரா?
எனது ஆட்சியில் என்ன தவறு நடந்து என்று கூறினால் பதில் சொல்ல தயார். உங்கள் ஆட்சியில் நடந்த தவறுக்கு பதில் சொல்ல தயாரா? உங்களால் முடியாது. காரணம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுள்ளது. அதனால் தான் மத்திய அரசால் பல துறைகளில் விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம் என சான்று கொடுத்துள்ளது. நமது வேட்பாளர் பன்னீர் செல்வத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். 
இவ்வாறு அவர் கூறினார்.
-----------------------------

Next Story