சிகிச்சையில் இருந்து கைதி திடீர் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
சிகிச்சையில் இருந்து கைதி திடீர் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் சிறையில் இருந்த கைதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் திடீரென இறந்ததால் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
சிறை கைதி
காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியில் கடந்த 10-ந் தேதி நாடக மேடையில் தூங்கிக்கொண்டிருந்த 65 வயது மூதாட்டியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அந்த பகுதியைச் சேர்ந்த நீலகண்டன்(வயது 52) என்பவரை காரைக்குடி தெற்கு போலீசார் கைது செய்தனர். இவர் திருப்பத்தூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்தநிலையில் சிறையில் இருந்த அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று முன்தினம் காலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்நிலையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி நேற்று அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தி முற்றுகையிட்டனர்.
நீதிபதி விசாரணை
போராட்டம் நடத்தியவர்களிடம் காரைக்குடி விரைவு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் விசாரணை நடத்தினார். ேமலும் நீலகண்டன் மனைவி பாண்டியம்மாளிடம்(45) வாக்குமூலம் பெற்றார். அப்போது நீலகண்டனின் மகன் கபாலிஸ்வரன், தனது தந்தை மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் நீதிபதியிடம் மனு கொடுத்தார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி உடற்கூறு அறிக்கை வந்தவுடன் தீர்வு காணப்படும் என்று கூறினார். இதைதொடர்ந்து நீதிபதி பிரபாகரன் முன்னிலையில், வீடியோ பதிவுடன் 2 மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டு பின்னர் நீலகண்டனின் உடல், பாண்டியம்மாள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story