கிருஷ்ணகிரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்


கிருஷ்ணகிரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 March 2021 12:29 AM IST (Updated: 18 March 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று, கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடந்தது. இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார். இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் பணியில் வாக்குச்சாவடி நிலைய தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை 1, நிலை 2 மற்றும் நிலை 3 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் நடைபெறுகிறது. தேர்தல் பணியில் 11 ஆயிரத்து 32 அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர். 
கொரோனா தடுப்பு பணி
இவர்களுக்கு மண்டல அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து செயல்முறை விளக்கம் மற்றும்  அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சி மையங்களில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் தெரிவிக்கப்படும்.
வாக்குசாவடி அலுவலர்களில் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விலக்களிக்கப்பட்டு உள்ளது. உரிய காரணங்கள் இன்றி தேர்தல் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்கள், பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் சிறப்பான முறையில் பயிற்சியை பெற்று தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story