உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.4¾ லட்சம் பறிமுதல்
உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.4¾ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
விழுப்புரம்,
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி முருகன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் வழிமறித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அந்த பையினுள் ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 320 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் சின்னசெவலையை சேர்ந்த விஷ்ணு (வயது 25) என்பதும், கடலூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மேலாளராக பணியாற்றி வருவதும் தெரிந்தது. இவர் பங்க்கில் வசூலான பணத்தை திருவெண்ணெய்நல்லூர் பெட்ரோல் பங்க்கில் இருந்த உரிமையாளரிடம் கொடுப்பதற்காக எடுத்து வந்ததாக கூறினார். இருப்பினும் அவரிடம் உரிய ஆவணம் ஏதும் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மரக்காணத்தில்
இதேபோல் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையிலான குழுவினர், மரக்காணம் அருகே ஆலத்தூர் கூட்டுசாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வீரபாண்டியை சேர்ந்த ஏழுமலை (37) என்பவரை சந்தேகத்தின்பேரில் மறித்து சோதனை செய்ததில் அவர் ஒரு பையில் ரூ.98 ஆயிரத்து 700-ஐ வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்துக்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி நாராயணன் தலைமையிலான குழுவினர் வளவனூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது புதுச்சேரி மாநிலம் கரையாம்புத்தூரை சேர்ந்த நடராஜன் என்பவர் மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 190-ஐ எடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் இளையராஜா தலைமையிலான குழுவினர் அரியலுார் திருக்கை கூட்டுரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது கண்டாச்சிபுரம் அடுத்த மடவிளாகம் கிராமத்தை சேர்ந்த மணிபாலன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.68 ஆயிரத்து 700- ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story