ஈரோடு மாவட்டத்தில் வாகன சோதனை: உரிய ஆவணம் இல்லாத ரூ.2½ கோடி பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி
ஈரோடு மாவட்டத்தில் வாகன சோதனையின்போது உரிய ஆவணம் இல்லாத ரூ.2½ கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் வாகன சோதனையின்போது உரிய ஆவணம் இல்லாத ரூ.2½ கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகன தணிக்கை
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுப்பதற்காக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை கொண்டு செல்லக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. மேலும், பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வினியோகம் போன்றவற்றை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு போன்ற பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டும், ரோந்து சென்றும் கண்காணித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்புக்குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
ரூ.2 கோடி
விசாரணையில் வேனில் வந்தவர்கள் ஏ.டி.எம். மையங்களுக்கு பணத்தை கொண்டு சென்று நிரப்பும் தனியார் ஏஜென்சியை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் ஈரோடு சத்திரோட்டில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து ஏ.டி.எம். மையங்களுக்கு பணத்தை நிரப்புவதற்காக ரூ.2 கோடியே 5 லட்சத்தை கொண்டு சென்றதும் தெரிய வந்தது. அதற்கான ஆவணங்களை வாங்கி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ரூ.1 கோடியே 65 லட்சத்துக்கு மட்டுமே ஆவணங்கள் இருந்ததும், மீதமுள்ள ரூ.40 லட்சத்துக்கு ஆவணங்கள் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.2 கோடியே 5 லட்சத்துடன் வேனை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான இளங்கோவனிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 4 மணிநேரத்துக்கு பிறகு ரூ.40 லட்சத்துக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால், ரூ.2 கோடியே 5 லட்சம் விடுவிக்கப்பட்டது.
ரூ.35½ லட்சம்
இதேபோல் ஈரோடு வீரப்பம்பாளையம் பிரிவு பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஈரோடு நோக்கி வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், நசியனூரை சேர்ந்த நசிர் ஷேக் அலி முகமது பாஷா (வயது 58) என்பதும், பழ வியாபாரியான அவர் பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் ரூ.35 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்துவதற்காக எடுத்து சென்றதும் தெரியவந்தது. ஆனால் அவரிடம் இருந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனிடம் ஒப்படைத்தனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே மூங்கில்பட்டி பகுதியில் பறக்கும் படை அதிகாரி முருகேசன் தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை 8 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் கோழி கழிவுகளை விற்றுவிட்டு் அதற்கான பணம் 1 லட்சத்து 58 ஆயிரத்து 400 ரூபாயுடன் நாமக்கல் மாவட்டம் என்.புதுப்பட்டி பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 30) என்பவர் ஒரு லாரியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதிகாரிகள் அந்த லாரியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் சிவக்குமாரிடம் இருந்த பணம் பறிமுதல் ெசய்யப்பட்டு, அந்தியூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி இளங்கோவிடம் ஒப்படைக்கப்பட்டது.
கவுந்தப்பாடி
இதேபோல் கவுந்தப்பாடி அருகே உள்ள தயிர்பாளையம் பிரிவில் மெய்யப்பன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த குமாரபாளையம் பாரதி நகர் பகுதியை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் அங்கப்பன் என்பவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இதில் அவர் பவானி குமாரபாளையத்தில் இருந்து கவுந்தப்பாடிக்கு தொழில் விஷயமாக ரூ.70 ஆயிரத்தை கொண்டு் சென்றது தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு பவானி தேர்தல் அலுவலர் வாணி லட்சுமி ஜெகதாம்பாளிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு, அந்தியூர், கவுந்தப்பாடி பகுதியில் நடந்த வாகன சோதனையில் நேற்று ரூ.2 கோடியே 42 லட்சத்து 78 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story