சி-விஜில் செயலி மூலம் தேர்தல் விதிமீறல் புகார்கள் அளிக்க வேண்டும்; கலெக்டர் விஷ்ணு அறிவுறுத்தல்


சி-விஜில் செயலி மூலம் தேர்தல் விதிமீறல் புகார்கள் அளிக்க வேண்டும்; கலெக்டர் விஷ்ணு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 18 March 2021 2:35 AM IST (Updated: 18 March 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

சி-விஜில் செயலி மூலம் தேர்தல் விதிமீறல் புகார்கள் அளிக்க வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.

நெல்லை:
தேர்தல் விதிமீறல்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக சி-விஜில் என்ற செயலி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், பயிற்சி உதவி கலெக்டர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி வேதநாதன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சி-விஜில் செயலி குறித்து கலெக்டர் விஷ்ணு விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 81 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். நாடு முழுவதும் தேர்தல் நடத்துவதற்கு சுமார் 1 கோடியே 50 லட்சம் பணியாளர்கள் குறிப்பாக கிராம உதவியாளர்கள் முதல் மாவட்ட கலெக்டர் வரை அனைத்து வகையான அலுவலர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் பல்வேறு வகையிலான மத்திய, மாநில அரசின் பல்வேறு பாதுகாப்பு படையினரும் தேர்தலில் ஈடுபடுகிறார்கள்.
தேர்தல் காலங்களில் நடைபெறும் விதிமீறல்களை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிப்பது மாணவ-மாணவிகளின் பங்கு மிக முக்கியமானது. எனவே இந்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி இங்கு நடைபெறுகிறது. எனவே மாணவ- மாணவிகளான நீங்கள் எங்கு தேர்தல் விதிமுறை மீறல் நடந்தாலும் உடனே தேர்தல் ஆணையத்திற்கு சி-விஜில் செயலி மூலம் புகார் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புகார் அளிப்பவர்கள் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

நீங்கள் அளித்த புகார் குறித்து 100 நிமிடங்களுக்குள் அதற்கான தீர்வு காணப்படும். முதல் முறை வாக்காளர்களாகிய நீங்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். சி-விஜில் செயலி குறித்து உங்கள் தொடர்பில் உள்ள அனைத்து குழுக்களுக்கும் வாட்ஸ்-அப், பேஸ்புக் மூலம் தெரியப்படுத்தி இந்தியாவிலே நம்ம மாவட்டத்தில் தான் சி-விஜில் செயலி அதிகமாக பயன்படுத்தப்பட்டது என்ற பெருமையை ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். .

Next Story