நாங்குநேரி தொகுதி கண்ணோட்டம்


நாங்குநேரி தொகுதி கண்ணோட்டம்
x
தினத்தந்தி 18 March 2021 3:13 AM IST (Updated: 18 March 2021 3:13 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் சற்று பெரிய தொகுதி நாங்குநேரி தொகுதி ஆகும்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் சற்று பெரிய தொகுதி நாங்குநேரி தொகுதி ஆகும். இது விவசாயம் நிறைந்த பகுதியாகும். இங்கு பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

வாழை சாகுபடி

இந்த தொகுதியில் உள்ள களக்காடு பகுதியில் வாழை சாகுபடி அமோகமாக நடக்கிறது. இங்கு விளையும் வாழைகள் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி ஆகிறது. மேலும் நெற்பயிர் சாகுபடியும் குறிப்பிடத்தக்க அளவில் நடக்கிறது. இதுதவிர பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்கள்.  இந்த தொகுதி அதிக கிராமங்களை உள்ளடக்கியது ஆகும். இங்கு மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு புலிகள் காப்பகம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் ஆகிய முக்கிய சுற்றுலா தலங்கள் அமைந்து உள்ளன.

நாங்குநேரி தாலுகா மற்றும் திசையன்விளை, பாளையங்கோட்டை, நெல்லை ஆகிய தாலுகாக்களில் சில பகுதிகளை உள்ளடக்கி உள்ளது நாங்குநேரி தொகுதி. இங்கு நாங்குநேரி, களக்காடு, பாளையங்கோட்டை ஆகிய யூனியன்களும், நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, ஏர்வாடி, களக்காடு, திருக்குறுங்குடி ஆகிய நகர பஞ்சாயத்துகளும் உள்ளன. இந்த தொகுதியில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 803 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 40 ஆயிரத்து 544 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 9 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 356 வாக்காளர்கள் உள்ளனர்.

வெற்றி விவரம்

நாங்குநேரி தொகுதி இதுவரை 16 தேர்தலை சந்தித்து உள்ளது. இதில் அ.தி.மு.க. 5 முறையும் (1980, 1984, 1991, 2001, 2019), தி.மு.க. 2 முறையும் (1971, 1989), காங்கிரஸ் 6 முறையும் (1952, 1957, 1962, 1967, 2006, 2016), இந்திய கம்யூனிஸ்டு (1996), சமத்துவ மக்கள் கட்சி (2011), ஜனதா கட்சி (1977) ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளது. 

இந்த தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு 2019-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரெட்டியார்பட்டி நாராயணன் 95 ஆயிரத்து 377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரூபி மனோகரன் 61 ஆயிரத்து 932 வாக்குகள் பெற்றார்.

கோரிக்கைகள்

இந்த தொகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. நாங்குநேரி, மூைலக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு விவசாயம் செய்வதற்கு தேவையான தண்ணீர் கிடைக்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் தாமிரபரணி ஆற்றில் வெள்ள காலத்தில் வீணாக கடலுக்கு செல்கின்ற தண்ணீரை அந்த பகுதிக்கு கொண்டு செல்வதற்காக வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை விரைவாக முடித்து அதில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். பச்சையாறு அணையில் இருந்து நாங்குநேரிக்கு கீழே உள்ள 46 குளங்களை இணைத்து நீர்ப்பாசனம் கிடைக்க செய்யும் வகையில் தனி கால்வாய் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். 

களக்காடு, திருக்குறுங்குடி, ஏர்வாடி பகுதியில் வாழை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. எனவே, அங்கு வாழைக்காய் பதப்படுத்தி வைத்து நல்ல விலைக்கு விற்பனை செய்ய நவீன வசதியுடன் கூடிய குடோன் அமைத்து தர வேண்டும். களக்காடு பகுதியில் காட்டுப்பன்றிகள், யானை ஆகியவை விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும். நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அதிக தொழிற்சாலைகளை கொண்டு வந்து இங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு அதிக பஸ்கள் இயக்க வேண்டும். மூைலக்கரைப்பட்டி, பரப்பாடி ஆகிய பகுதிகளில் அரசு கலைக்கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த பகுதி மக்கள் முன் வைக்கின்றனர். 

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தச்சை கணேசராஜா போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். அ.ம.மு.க. சார்பில் பரமசிவ அய்யப்பனும், நாம் தமிழர் கட்சி சார்பில் வீரபாண்டியும் களம் காண்கின்றனர். இங்கு இந்த முறை வெல்லப்போவது யார்? என்பது வருகிற மே மாதம் 2-ந்தேதி தெரிந்துவிடும்.

Next Story