புளியரை பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.4½ லட்சம் சிக்கியது
புளியரை பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.4½ லட்சம் சிக்கி உள்ளது.
அச்சன்புதூர்:
செங்கோட்டை அருகே தமிழக-கேரள எல்லையான புளியரை பகுதியில் பறக்கும் படை அலுவலர் சிக்கந்தர் பீவி தலைமையில் ஊழியர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த ஆனந்த் என்பவர் வாகனத்தில் சோதனை செய்ததில் அதில் ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 950-ம், கேரளாவில் இருந்து வாடிப்பட்டி நோக்கி சென்ற மாணிக்கம் என்பவரின் வாகனத்தில் சோதனை நடத்தியதில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 500-ம் கொண்டு வந்தது தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்து, கடையநல்லூர் தாலுகா தலைமையிட துணை தாசில்தார் நாகராஜனிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் புளியரை சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்வதற்காக வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில், லாரி உரிமையாளர் திருவனந்தபுரம் அருகே உள்ள மணக்காடு ஊரை சேர்ந்த முகமது இஸ்மாயில் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. அவர் திராட்சை பழங்கள் வாங்குவதற்காக பணத்துடன் மதுரைக்கு செல்வதாக தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணத்தை கொடுத்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி அவரிடம் தெரிவித்தனர். புளியரை பகுதியில் மொத்தம் ரூ.4 லட்சத்து 54 ஆயிரத்து 450 பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story