திருச்சி-துவாக்குடி வரையிலான ‘அணுகுசாலை பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பேன்’ வேட்பு மனு தாக்கல் செய்த பின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எம்.முருகானந்தம் பேட்டி
திருச்சி-துவாக்குடி வரையிலான அணுகுசாலை பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பேன் என்று வேட்பு மனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பொறியாளர் எம்.முருகானந்தம் தெரிவித்தார்.
திருச்சி,
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம்.முருகானந்தம் நேற்று பிற்பகல் திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகனிடம் வேட்பு மனு தாக்கல் செய்து உறுதி மொழி எடுத்து கொண்டார். அப்போது மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன் மற்றும் விஜயகாந்த் உடன் இருந்தனர். முன்னதாக, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, திருச்சி-தஞ்சை ரோட்டில் கல்லணை பிரிவு சாலையில் இருந்து மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் கூட்டணி கட்சிகளான இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சியினர் புடைசூழ பட்டாசு வெடித்தும், மேளதாளத்துடனும் தாசில்தார் அலுவலகத்திற்கு முருகானந்தம் ஊர்வலமாக வந்தார். அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் வேட்பாளர் முருகானந்தம் கூறியதாவது:-
திருவெறும்பூர் தொகுதியில் 5 முறைக்கு மேல் தி.மு.க.வுக்கும், 4 முறைக்கும் மேல் அ.தி.மு.க.வுக்கும் வாய்ப்பளித்த மக்கள், இந்த ஒருமுறை மக்கள் நீதிமய்யத்திற்கு வாய்ப்பளித்தால் நேர்மை என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு, திருவெறும்பூர் தொகுதிக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் நிறைவேற்றுவேன்.
குறிப்பாக, திருவெறும்பூரை மீட்டெடுக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். இங்கு தொழிற்சாலை இருக்கிறது. ஆனால், தொழில் இல்லை. கனிம வளம், குப்பை போன்ற விஷயங்கள் ரொம்ப நாளாக பேசிக்கொண்டிருக்கிறோம். அதற்கும் தீர்வு இல்லை. எல்லா இடங்களிலும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதற்கும் தீர்வு இல்லை. மிக முக்கியான அடிப்படை பிரச்சினையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இவற்றுக்கு தீர்வு காண்பேன். திருவெறும்பூர் தொகுதி மண்னின் மைந்தனாக போட்டியிடுகிறேன். வாக்காள பெருமக்கள் எனக்கு ‘டார்ச்லைட்’ சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தர வேண்டும் என வேண்டுகிறேன். என்னை வெற்றிபெற செய்யும் பட்சத்தில், திருச்சி-துவாக்குடி சாலை விரிவாக்கமானது 2 விதமான பிரச்சினையாக உள்ளது. அணுகு சாலை அல்லது உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது.
என்னை பொறுத்தமட்டில் வரும் காலக்கட்டத்தில் இரு தரப்பினருக்குமான உடன்பாட்டை எட்டி, மக்களுக்கு எவ்வித வருத்தமும் வராத வகையில் சுமூகமான ஒரு தீர்வை என்னால் கொடுக்க முடியும் என திடகாத்திரமாக நம்புகிறேன்.மேலும் அரியமங்கலம் குப்பை கிடங்கிற்கு நல்லதொரு தீர்வு காணப்படும். நான் வெற்றி பெற்றால் ஒவ்வொரு மாதமும் திருவெறும்பூர் தொகுதியில் மக்களோடு மக்களாக கண்டிப்பாக வலம் வருவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story