திருச்சியை சென்னைக்கு அடுத்த முக்கிய நகரமாக மாற்றி காட்டுவேன் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் கே.என்.நேரு பேச்சு


திருச்சியை சென்னைக்கு அடுத்த முக்கிய நகரமாக மாற்றி காட்டுவேன் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் கே.என்.நேரு பேச்சு
x
தினத்தந்தி 18 March 2021 9:36 AM IST (Updated: 18 March 2021 9:36 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியை சென்னைக்கு அடுத்த முக்கிய நகரமாக மாற்றி காட்டுவேன் என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு பேசினார்.

திருச்சி,

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளரும், தி.மு.க. முதன்மைச்செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் தி.மு.க. 100 சதவீத வெற்றி பெற்றதால் நான் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து முதன்மைச்செயலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறேன். இதற்கெல்லாம் காரணம் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரின் உழைப்புதான்.  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அப்படி ஆட்சி அமைக்கும் நேரத்தில் எனக்கு பெரிய பதவி கிடைத்தாலும் நான் உங்களோடு உங்களில் ஒருவனாக தான் இருப்பேன். உங்களுக்கு சலுகைகள் கிடைக்க பாடுபடுவேன்.

திருச்சியை தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த முக்கிய நகரமாக மாற்றி காட்டுவதற்கு பாடுபடுவேன். திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைத்தே தீருவேன். கோணக்கரை சுடுகாடு சாலையை அகலமாக்கி ஸ்ரீரங்கத்துடன் இணைப்பேன். வயலூர் சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

திருச்சி மேற்கு தொகுதியில் மட்டும் தி.மு.க. வெற்றி பெற்றால் போதாது. மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் நமது வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும். அதற்கு தொண்டர்களாகிய நீங்கள் அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் ஸ்ரீதர் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Next Story