கரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொரோனா காலத்தில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தாதது ஏன்? வி.செந்தில்பாலாஜி கேள்வி
கரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொரோனா காலத்தில் எனது தொகுதி மேம்பாட்டு நிதிைய பயன்படுத்தாதது ஏன்? என வி.செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
க.பரமத்தி,
தி.மு.க. சார்பில் நேற்று அரவக்குறிச்சியில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கி பணிமனையை திறந்துவைத்தார். மேலும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மொஞ்சனூர் பி.ஆர்.இளங்கோவை அறிமுகப்படுத்தி, வி.செந்தில்பாலாஜி பேசியதாவது:- நடைபெற உள்ள தேர்தலுக்கு தி.மு.க. தலைவர் செய்யக்கூடிய பணிகளை மட்டும் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு உள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில் வெற்று இலவசங்களை அறிவித்து உள்ளார்.
கடந்த மே மாதம் தமிழகத்தில் கொரோனா அதிகமாக பாதித்தது. அப்போது கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மளிகைப் பொருட்கள் வழங்கினேன். அதனைத்தொடர்ந்து எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.1 கோடியே 3 லட்சத்தை வழங்கினேன். அதனை மாவட்ட கலெக்டர் உபகரணங்கள் வாங்க பயன்படுத்தவில்லை. அதனைத்தொடர்ந்து மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இதனை விசாரித்த நீதிபதிகள், நான் கொடுத்த நிதியை மருத்துவ உபகரணங்கள் வாங்க பயன்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார்.
ஆனால் இதுவரையும் அந்த நிதியை பயன்படுத்தி மருத்துவ உபகரணங்கள் வாங்காதது ஏன்? மருத்துவ உபகரணங்கள் வாங்கி இருந்தால் பல நோயாளிகளுக்கு உதவியாக இருந்திருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நன்னியூர், அண்ணாநகர், என்.புதூர், செவ்வந்திபாளையம், என்.குளத்தூர், வா.பசுபதிபாளையம், காட்டூர், கே.வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து மலர்தூவி வரவேற்பு கொடுத்தனர்.
Related Tags :
Next Story