எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பாதாள சாக்கடை வசதி செய்துதரப்படும் திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு உறுதி
எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பாதாள சாக்கடை வசதி செய்துதரப்படும் திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு உறுதியளித்து வாக்கு சேரித்தார்.
திருச்சி,
திருச்சி கழக முதன்மை செயலாளரும், தி.மு.க. மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு எடமலைப்பட்டி புதூரில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பட்டிரோடு, செல்வ நகர், கிருஷ்ணாபுரம், பஞ்சப்பூர் நாகமங்களம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக, வீதி, வீதியாக சென்று வாக்கு சேரித்தார். அவருக்கு அப்பகுதி மக்கள் கும்ப மரியாதை செய்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். அப்போது திறந்த வேனில் இருந்து மக்களிடையே பேசுகையில், மக்கள் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆயினும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
தி.மு.க. ஆட்சி அமையுமானால், ஆறு மாத காலத்திற்குள் எடமலைப்பட்டி புதூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும். இதன் வாயிலாக எடமலைப்பட்டி புதூர் பகுதி திருச்சி மாநகரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறும். சாலை வசதி செய்து தரப்படும். குடிநீர் வினியோகம் எவ்வித தங்கு தடையின்றி சீராக வினியோகம் செய்யப்படும். பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படும்.
நான் செல்லுமிடமெல்லாம் பொதுமக்கள் ஏகோபித்த ஆதரவு தருகிறார்கள். எனவே தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைவது உறுதி என்றார். இந்த பிரசாரத்தின் போது மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் முத்துசெல்வம், பகுதி செயலாளர் மோகன்தாஸ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜவஹர், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுரேஷ், காங்கிரஸ் மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் மற்றும் ஏராளமான தி.மு.க.வி.னரும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story