ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது லட்சியம்; திருச்சி தடகள வீராங்கனை தனலட்சுமி பேட்டி
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது லட்சியம் என்று திருச்சி தடகள வீராங்கனை தனலட்சுமி கூறினார்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 14-வது தேசிய பெடரேஷன் கோப்பைக்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 15-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு அணியில் திருச்சியிலிருந்து 20 பேர் பங்கேற்றனர். இந்த தேசிய தடகள போட்டியில் திருச்சியை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் சாதனை புரிந்துள்ளனர். அதன்படி பெண்கள் பிரிவில் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். ஆண்கள் பிரிவில் 200 மீட்டர் ஓட்டத்தில் இலக்கியதாசன் தங்கமும், விக்னேஷ் வெண்கல பதக்கமும் வென்றனர். இந்தநிலையில் வீரர்-வீராங்கனைகள் நேற்று ெரயில் மூலம் திருச்சி வந்தனர். அவர்களுக்கு ரெயில் நிலையத்தில் திருச்சி தடகள சங்க செயலாளர் ராஜு, மக்கள் சக்தி இயக்க ஒருங்கிணைப்பாளர் நீலமேகம் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் நிருபர்களுக்கு தனலட்சுமி பேட்டியளித்த போது, “ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன். அதுவே எனது லட்சியமாக உள்ளது. எனக்கு சிறந்த பயிற்சி அளித்த எனது பயிற்சியாளருக்கு நன்றி. மேலும் எனக்கு உறுதுணையாக இருந்த எனது பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
Related Tags :
Next Story