கோவை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் அதிக வேட்பு மனுக்கள் இருப்பதால் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுமா?


கோவை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் அதிக வேட்பு மனுக்கள் இருப்பதால் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுமா?
x
தினத்தந்தி 22 March 2021 3:27 PM IST (Updated: 22 March 2021 3:27 PM IST)
t-max-icont-min-icon

2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுமா?

கோவை

கோவை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் அதிக வேட்பு மனுக்கள் இருப்பதால் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுமா? என்பது இன்று (திங்கட்கிழமை) தெரியவரும்.

வேட்பு மனுக்கள்

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் பரிசீல னை நேற்று முடிந்தது. வேட்பு மனுக்களை இன்று (திங்கட்கிழமை) மதியம் 3 மணி வரை வாபஸ் பெறலாம். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 317 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், 176 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

மீதி உள்ள 141 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இதில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய 3 தொகுதிகளிலும் தலா 21 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். 

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சூலூரில் 16 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் வால்பாறையில் தான் குறைந்தபட்சமாக 6 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

2 எந்திரங்கள் பயன்படுத்தப்படுமா?

வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாள் என்பதால் அதன் பின்னர் ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை பேர் போட்டியிடு கிறார்கள் என்ற இறுதி பட்டியல் வெளியிடப்படும்.  

ஒரு தொகுதியில் 15 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் அந்த தொகுதியில் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது

ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 பொத்தான்கள் இருக்கும். எனவே அதிகபட்சமாக 15 வேட்பாளர்கள் பெயரை தான் பொருத்த முடியும். ஒரு பொத்தான் நோட்டாவுக்கு ஒதுக்கப்படும்.

எனவே ஒரு தொகுதியில் 15 வேட்பாளருக்கு மேல் போட்டியிட்டால் அங்கு 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டி யிருக்கும். தற்போது, சூலூர் மற்றும் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய 4 தொகுதிகளில் 16-க்கும் அதிகமான வேட்பு மனுக்கள் உள்ளன. அங்கு யாரும் வாபஸ் பெறா விட்டால் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டியது இருக்கும்.

இன்று தெரியும்

அதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது இன்று மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும் போது தெரிந்து விடும். ஆனாலும் சில தொகுதிகளில் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தும் நிலை வந்தாலும் அதை சமாளிக்க போதுமான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கையிருப்பில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story