வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் வட மாநில தொழிலாளர்கள்
மேற்கு வங்காளம், அசாம் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் வடமாநில தொழிலாளர்கள் வாக்களிப்பதற்காக ரெயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இது தவிர பீகார் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி கோவை மாவட்டத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இதற்காக அவர்கள், மூட்டை முடிச்சுகளுடன் கோவை ரெயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனர். அங்கு அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே ரெயிலில் பயணம் செய்ய ஊழியர்கள் அனுமதிக்கின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள்
இது குறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறியதாவது
கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வடமாநிலங்களை சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகிறோம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலானோர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி சென்றோம். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் திரும்பி வந்தோம்.
ஆனாலும் பெரும்பாலான தொழிலாளர்கள் குடும்பத்துடன் இங்கேயே தங்கி பணிபுரிகின்றனர். தற்போது பீகாரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. அது போல் மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு செல்கிறோம்.
டிக்கெட் கட்டணம்
கொரோனா காலத்திற்கு முன் முன்பதிவு இல்லா ரெயிலில் சொந்த ஊர்களுக்கு பயணித்தோம். டிக்கெட் கட்டணமும் குறைவாக இருந்தது. தற்போது கொரோனா அச்சம் காரணமாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ரெயிலில் பயணிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
எனவே நாங்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி ரெயிலில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு சிலர் கொரோனா ஊரடங்கு வந்து விடுமோ என்ற அச்சத்திலும் சொந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story