உலக காடுகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு சூழல் சுற்றுலா


உலக காடுகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு சூழல் சுற்றுலா
x
தினத்தந்தி 22 March 2021 3:40 PM IST (Updated: 22 March 2021 3:40 PM IST)
t-max-icont-min-icon

உலக காடுகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு சூழல் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

கோத்தகிரி

உலக சிட்டுக்குருவிகள், காடுகள் மற்றும் தண்ணீர் தினத்தையொட்டி கோத்தகிரி வனத்துறை சார்பில் லாங்வுட் சோலையில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கோத்தகிரி வனச்சரகர் செல்வகுமார் தலைமை தாங்கினார். 

வன காப்பாளர் சிவபார்வதி வரவேற்றார். இதில், தமிழ்நாடு அறிவியல் கழக மாவட்ட செயலாளரும், லாங்வுட் பாதுகாப்பு குழுவின் உறுப்பினருமான கே.ஜே.ராஜூ கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், காடுகள் மனித குலத்தின் தொட்டில். நமது அனைத்து உணவு வகைகளும், 200-க்கும் மேற்பட்ட மருந்துகளும் காடுகளில் இருந்துதான் கிடைக்கிறது. 

உலக அளவில் ஒவ்வொரு வினாடியும் ஒரு கால்பந்து மைதானம் அளவுள்ள காடுகள் விவசாயத்திற்காக அழிக்கப்படுகிறது. நமது நாட்டிலுள்ள காடுகளில் 11 சதவீதம் தான் வளமான காடாக உள்ளது. ஒரு புலி வாழ்ந்தால் 50 சதுர கி.மீ. பரப்புள்ள காடுகள் வாழும். அதில் 6 நதிகள் உற்பத்தியாகும்.

 காடுகளின் அழிவு மனித குலத்தின் அழிவு என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து  அழிந்து வரும் இனமான சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார். 

தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் லாங் வுட் சோலையில் சூழல் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். முடிவில் சந்திரசேகர் நன்றி கூறினார்.


Next Story