உடைந்து தொங்கும் தடுப்பு சுவற்றால் விபத்து ஏற்படும் அபாயம்
சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் உடைந்து தொங்கும் தடுப்பு சுவற்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் உடைந்து தொங்கும் தடுப்பு சுவற்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பி.ஏ.பி. பிரதான வாய்க்கால்
சுல்தான்பேட்டை வட்டாரத்தில் 15 ஆயிரத்து 600 ஏக்கர் விளை நிலம் பி.ஏ.பி. திட்டத்தில் பாசனம் பெற்று வருகிறது. பருவமழை கைகொடுக்காத போது விவசாயிகளுக்கு கைகொடுப்பது பி.ஏ.பி. பாசன தண்ணீர் ஆகும்.
இந்த நிலையில், சுல்தான்பேட்டை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் செஞ்சேரி பிரிவு அருகே பி.ஏ.பி. பிரதான வாய்க்கால் குறுக்கிடுகிறது. இதனால் அதன் மீது பாலம் அமைக்கப்பட்டு ஓரத்தில் தடுப்புச்சுவரும் கட்டப்பட்டன.
உடைந்த தடுப்புச்சுவர்
ஆனால் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் அந்த தடுப்புச்சுவர் உடைந்து தொங்குகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பயத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் தடுப்புச்சுவர் உடைந்து இருப்பதால், அந்த வழியாக செல்லவே பயமாக இருக்கிறது.
தவறி விழுகிறார்கள்
தற்போது பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், வாய்க்காலில் அதிகமாக தண்ணீர் செல்கிறது. 10 அடி ஆழத்துக்கும் அதிகமாக இருக்கிறது. தடுப்புச்சுவர் உடைந்து உள்ளதால் பலர் அதன் மீது மோதி வாய்க்காலுக்குள் விழுந்து உள்ளனர்.
மேலும் அங்கு தெருவிளக்கு வசதியும் இ்ல்லை. குறிப்பாக இளைஞர்கள் பலர் இருசக்கர வாகனங்களில் வேகமாக வரும் போது, நிலைதடுமாறி வாய்க்காலில் தவறி விழுந்து உயிர் தப்பும் நிலை நீடித்து வருகிறது.
உடனடி நடவடிக்கை
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு இந்த வாய்க்காலில் உடைந்து இருக்கும் தடுப்புச்சுவற்றை அகற்றிவிட்டு மீண்டும் அங்கு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story