திருமுல்லைவாசல் மீனவர்கள் வேலைநிறுத்தம்
சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி திருமுல்லைவாசல் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்து உள்ளனர்.
சீர்காழி:
சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி திருமுல்லைவாசல் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்து உள்ளனர்.
வேலை நிறுத்த போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல், கூழையார், தொடுவாய். உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 100-க்கும் மேற்பட்ட கட்டு மரங்கள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். தமிழக கடற்பகுதியில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் திருமுல்லைவாசல், தொடுவாய் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் விசைப்படகுகள், திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகம் அருகில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் விசைப்படகை நம்பி உள்ள ஏராளமான தொழிலாளர்கள் நேற்று முதல் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தலை புறக்க முடிவு
இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:- பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் சுருக்குமடி வலை பயன்படுத்த அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
எனவே அரசு உடனடியாக மற்ற மாநிலங்கள் போல் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்றால், வருகிற சட்டசபை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு மீனவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story