புதுவையில் கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்றுக்கு 6 பேர் சாவு


புதுவையில் கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்றுக்கு 6 பேர் சாவு
x
தினத்தந்தி 22 March 2021 8:53 PM IST (Updated: 22 March 2021 8:53 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றுக்கு புதுவையில் கடந்த 10 நாட்களில் 6 பேர் இறந்தனர். இதில் 5 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள்.

புதுச்சேரி, மார்ச்.22-
கொரோனா தொற்றுக்கு புதுவையில் கடந்த 10 நாட்களில் 6 பேர் இறந்தனர். இதில் 5 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள்.
கொரோனா தொற்று
கடந்த ஆண்டு  மார்ச் மாதம் இந்தியாவில் ஊடுருவிய கொரோனா தொற்று நவம்பர், டிசம்பர் மாதங்களில் கட்டுக்குள் வந்தது. இதனால் பாதிப்பு, உயிரிழப்பு குறைந்தது.  இத்துடன் கொரோனா சென்றுவிடும் என்று மக்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
இந்த நிலையில்     கடந்த சில நாட்களாக  இந்தியாவில் கொரோனா      தொற்று வேகமெடுத்து வருகிறது. புதுவையிலும் அதன் பாதிப்பு இருமடங்காக உயர்ந்தது. தொற்று பரவலை தடுக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்று பரிசோதனை நேற்று முதல் தொடங்கப்பட்டது. மேலும் முககவசம் அணிவது, பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
காரைக்கால் மூதாட்டி பலி
 புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 519 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 47 பேருக்கு தொற்று உறுதியானது. 29 பேர் குணமடைந்துள்ளனர். காரைக்காலை சேர்ந்த 65 வயது மூதாட்டி கொரோனாவுக்கு பலியானார். 
மாநிலத்தில் இதுவரை 40 ஆயிரத்து 433 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 412 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 39 ஆயிரத்து 345 பேர் குணமடைந்துள்ளனர். 676 பேர் உயிரிழந்துள்ளனர்.
10 நாட்களில் 6 பேர்..
புதுவையில்   கடந்த 13-ந் தேதி முதல் இன்று வரை கொரோனா   தொற்றுக்கு 6 பேர்  இறந்துள்ளனர். இதில் 5 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story