பாரதி பூங்கா ஆயி மண்டபம் சீரமைப்பு பணி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்


பாரதி பூங்கா ஆயி மண்டபம் சீரமைப்பு பணி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 22 March 2021 9:05 PM IST (Updated: 22 March 2021 9:05 PM IST)
t-max-icont-min-icon

பாரதி பூங்காவில் உள்ள ஆயி மண்டபத்தை ரூ.15 லட்சம் செலவில் சீரமைக்கும் பணியை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வை யிட்டார்.

புதுச்சேரி, மார்ச்.22-
பாரதி பூங்காவில் உள்ள ஆயி மண்டபத்தை ரூ.15 லட்சம் செலவில் சீரமைக்கும்    பணியை கவர்னர்     தமிழிசை சவுந்தரராஜன் பார்வை யிட்டார்.
ஆயி மண்டபம் சீரமைப்பு 
புதுச்சேரி சட்டசபை, கவர்னர் மாளிகை எதிரே உள்ள பாரதி பூங்காவின்  மையப் பகுதியில் ஆயி மண்டபம் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு வாய்ந்ததும், அரசு சின்னமுமாகவும் விளங்கும் ஆயி மண்டபம் போதிய பராமரிப்பு இன்றி சேதமடைந்தது.
இந்தநிலையில்   பொதுப் பணித்துறை சார்பில் ரூ.15 லட்சம் செலவில் இந்த மண்டபத்தை  சீரமைக்கும் பணி நடக்கிறது. இதை கவர்னர் தமிழிசை  சவுந்தரராஜன் இன்று பார்வையிட்டு  அதிகாரி களுடன்  ஆலோசனை நடத்தினார். இந்த பணிகள் மே மாதம் இறுதியில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்புரவு ஊழியர்கள் புகார் 
அதைத்தொடர்ந்து பாரதி பூங்காவை சுற்றி பார்வையிட்டு கவர்னர்  தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார். அப்போது பூங்கா முறையாக பராமரிக்காமல் இருப்பதை கண்டு வேதனை அடைந்தார். 
இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகளை அழைத்து பூங்கா, ஆயி மண்டபத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அங்கிருந்த துப்புரவு பணியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் நிதியில்லை என்று கூறுகிறார்கள் என தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சம்பளம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 
அதைத்தொடர்ந்து கோலாஸ் நகரில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சென்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது கவர்னரின் ஆலோசகர் ஆனந்த் பிரகா‌‌ஷ் மகேஸ்வரி, கவர்னரின் சிறப்பு செயலர் சுந்தரேசன், அரசு செயலர் வல்லவன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
திருக்கனூரில்...
இதனை தொடர்ந்து திருக்கனூருக்கு சென்ற கவர்னர் தமிழிசை    சவுந்தரராஜன், கடை     வீதியில்    ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் தெரிவித்த புகாரின் பேரில், பல மாதங்களாக எரியாத உயர்கோபுர மின் விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அங்குள்ள பழைய மின் விளக்குகளை மாற்றி சோலார் அல்லது எல்.இ.டி. விளக்குகள் பொருத்தவும் அறிவுறுத்தினார்.
இதையடுத்து பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அதிகாரிகள் உடனடியாக ஒரு சில மின்விளக்குகளை எரிய நடவடிக்கை எடுத்தனர். இதனைத்தொடர்ந்து அவர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய   வேண்டும்  என அறிவுறுத்தினார்.   இந்த ஆய்வின் போது மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்   ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story