பறக்கும் படை சோதனையில் தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரிடம் ரூ.3¼ லட்சம் பறிமுதல்
தேனி மாவட்டத்தில் நடந்த பறக்கும் படை சோதனையில் தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரிடம் ரூ.3¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் நடந்த பறக்கும் படை சோதனையில் தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரிடம் ரூ.3¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன தணிக்கை
தேனி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, உத்தமபாளையம் அருகே மல்லிங்காபுரத்தில் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர். காரில் வந்த கோம்பையை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 38) என்பவரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 500 இருந்தது. சரக்கு வேனை விற்பனை செய்த பணத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்வதாக அவர் கூறினார். ஆனால், அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தேனியில் இருந்து வெங்கடாசலபுரம் சாலையில் பாலகிருஷ்ணாபுரம் விலக்கு பகுதியில் போடி சட்டமன்ற தொகுதிக்கான பறக்கும் படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் சோதனை செய்த போது, காரில் வந்த வெங்கடாசலபுரத்தை சேர்ந்த ஜெகதீசன் என்பவரிடம் ரூ.63 ஆயிரத்து 100 இருந்தது. அதற்கு உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
தி.மு.க. பிரமுகர்
இதேபோல் கம்பம் அருகே கருங்கோட்டை காலனி பகுதியில் நடந்த வாகன தணிக்கையின் போது, உத்தமபாளையத்தை சேர்ந்த சோனை முத்தையா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.73 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையே கடமலைக்குண்டுவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆண்டிப்பட்டி தொகுதிக்கான பறக்கும் படையினர் அங்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது அந்த மண்டபத்தில் இருந்த மேலப்பட்டியை சேர்ந்த தி.மு.க. கிளை செயலாளர் கனகேந்திரன் என்பவரிடம் ரூ.32 ஆயிரத்து 500 பணம் இருந்தது. அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் 4 பேரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 19 ஆயிரத்து 300 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story