போடி அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவர் மீட்பு


போடி அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவர் மீட்பு
x
தினத்தந்தி 22 March 2021 10:21 PM IST (Updated: 22 March 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

போடி அருகே கிணற்றில் தவறிவிழுந்த 10-ம் வகுப்பு மாணவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

போடி:
போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் தீபன் (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் இல்லை. மேலும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த கிணற்றில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் 100 அடி ஆழ அந்த கிணற்றில் பாதியளவு குப்பை மேடாகவே காணப்படுகிறது. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தீபன் சிறுநீர் கழிப்பதற்காக அந்த பாழடைந்த கிணற்றின் அருகில் சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக அந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த தீபன், தன்னை காப்பாற்றுமாறு அபயகுரல் எழுப்பினார். அதை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், மாணவரை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. 
இதைத்தொடர்ந்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு படையினர், கிணற்றுக்குள் விழுந்த தீபனை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

Next Story