விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம்- கலெக்டர் அண்ணாதுரை உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ஆ.அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக 2,368 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்பட உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்க ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் சானிடைசர் மற்றும் உடல்வெப்பநிலை பரிசோதனை கருவி பயன்படுத்தப்பட உள்ளது. முகக்கவசம் அணியாதவர்களை வாக்குச்சாவடி மையத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.
கொரோனா தடுப்பூசி
அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்கள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்கும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
சுகாதாரத்துறை சார்பாக மருத்துவ முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், கரைசல் பவுடர், நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணியவும் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சண்முகக்கனி, துணை இயக்குனர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story