பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்


பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 22 March 2021 11:02 PM IST (Updated: 22 March 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ‘‘அரோகரா” கோஷம் முழங்க திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பழனி :
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம்படைவீடான பழனியில், தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
இதில், தைப்பூச திருவிழாவையொட்டி பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் வருவது சிறப்பு அம்சம் ஆகும். 
கோடைக்காலமான பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பழனி மலைக்கோவிலில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, பக்தர்கள் விரதம் இருந்து கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெறவில்லை. ஆனால் ஆகமவிதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றது. 
கொடியேற்றத்துடன் தொடக்கம்
இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பங்குனி உத்தர திருவிழா பழனி திருஆவினன்குடி கோவிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
மேலும் நேற்று முன்தினம் இரவு கிராமசாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதேபோல் நேற்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிப்பட பூஜை நடந்தது.

முன்னதாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் வந்து கொடிமண்டபம் முன்பு எழுந்தருளினார். அதையடுத்து விநாயகர் சிலை முன்பு மயூரயாகம், வாத்திய பூஜைகள் நடந்தது. 

 சரண கோஷங்கள்

இதைத்தொடர்ந்து காலை 9.45 மணிக்கு மேல் வேதமந்திரங்கள் முழங்க தங்கக்கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரளாக இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீர வேல் முருகனுக்கு அரோகரா... என சரண கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது. 
கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை, உதவி ஆணையர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் அப்புக்குட்டி, உறுப்பினர்கள் செல்லமுத்தையா, கமலக்கண்ணன், சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், பழனிவேலு, கார்த்தி, கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வக்குமார், நவீன், நரேஷ், கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர் ஹரிகரமுத்து, சரவணப்பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், வள்ளுவர் தியேட்டர் உரிமையாளர் செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, ஆர்.வி.எஸ். லாட்ஜ் உரிமையாளர் அசோக் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 
 16 வகை அபிஷேகம்
இதைத்தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு மேல் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் அடிவாரம் பட்டக்காரர் மடத்தில் எழுந்தருளினார். அங்கு பங்குனி உத்திர முதல் நாள் மண்டகப்படி நடைபெற்றது. 
பின்னர் இரவு 8 மணிக்கு மேல் சன்னதி வீதி, கிரிவீதிகளில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை உலா நடந்தது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி மலைக்கோவிலில் நேற்று பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
திருக்கல்யாணம், தேரோட்டம்
பின்னர் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகர், மூலவருக்கு காப்புகட்டு நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சண்முகர், உற்சவர், துவார பாலகர்கள், மயில்வாகனம் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் முருகப்பெருமான், சிவன், பெரியநாயகிஅம்மன், நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு காப்புகட்டு நடந்தது.
திருவிழாவின் 6-ம் நாளான 27-ந்தேதி திருக்கல்யாணமும், 28-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் மற்றும் பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story