வால்பாறை பகுதியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


வால்பாறை பகுதியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 22 March 2021 11:26 PM IST (Updated: 22 March 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை பகுதியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வால்பாறை,

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வீசத்தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

 இதன் ஒரு பகுதியாக நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் உத்தரவின் பேரில் துப்புரவு அதிகாரி செல்வராஜ் தலைமையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்தனர். 

மேலும் வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

இந்த நிலையில் வால்பாறையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு நகராட்சி நிர்வாகத்தினர் அபராதம் விதித்து வருகின்றனர். இதேபோல வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு 2 முகக்கவசங்கள் வழக்கி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

பாதுகாப்பாக இருக்க வேண்டும்

இதுகுறித்து வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் வட்டார தலைமை டாக்டர் பாபுலட்சுமண் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.  அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பஸ்சில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

 இதுகுறித்து கண்டக்டர், டிரைவர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story