ஓசூர் அருகே மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.5 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
ஓசூர் அருகே மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.5 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஓசூர்,
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று ஓசூர் அருகே பாகலூர்-சர்ஜாபுரம் சாலையில், கக்கனூர் சோதனைச்சாவடி பகுதியில் மாநில வரி அலுவலர் பாரத் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் ரூ.5 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். அவர் கொத்தப்பள்ளியை சேர்ந்த நாராயண ரெட்டி என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்து, ஓசூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story