மதுரையில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது


மதுரையில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது
x
தினத்தந்தி 23 March 2021 2:16 AM IST (Updated: 23 March 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

மதுரை
மதுரையில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 34 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மதுரை கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு இருந்ததை போல் தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி, ஜூன், ஜூலை, மாதங்களில் உச்சக்கட்டத்தை தொட்டது. அதிலும் குறிப்பாக சென்னைக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பு ஏற்பட்டது மதுரையில் தான். தற்போதும் அதே நிலை தான் தொடர்கிறது.
படிப்படியாக குறைந்த வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது. தென் மாவட்டங்களில் மதுரையில் தான் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியான பட்டியலில், மதுரையில் ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 20 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை 21 ஆயிரத்து 498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதுபோல், 20 ஆயிரத்து 885 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். 462 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 151 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
எச்சரிக்கை
மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், நகர் பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வரும் காட்சிகளை காணமுடிகிறது. அதுபோல், மக்களும் சரிவர முககவசம் அணிவதில்லை. கொரோனா பாதிப்பு குறைந்து விட்டது என்ற நினைப்பில் முககவசம் அணியாமல் வெளியில் சென்று வருகிறார்கள். வரும் காலங்களிலும் கொரோனா பாதிப்பு மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கொரோனா கட்டுப்படுத்துவதில் அதிகாரிகளுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே அளவிற்கு பொதுமக்களுக்கும் இருக்கிறது. பொதுமக்கள் இனியும் தாமதித்தால் பேராபத்தை சந்திக்க வேண்டியதிருக்கும்.
கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. அதுபோல், கொரோனா பாதிப்பின் அதிகரித்ததன் விளைவாக கல்லூரிகளுக்கும் நேற்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களிலும் பாதிப்பு குறையவில்லை என்றால் ஊரடங்கு போடுவதற்கும் அரசு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். முக்கியமாக முககவசம் அணிய வேண்டும் என்றனர்.

Next Story