தலைமை தேர்தல் அதிகாரியின் உத்தரவின்றி வாக்குச்சாவடிக்குள் செல்லக்கூடாது


தலைமை தேர்தல் அதிகாரியின் உத்தரவின்றி வாக்குச்சாவடிக்குள் செல்லக்கூடாது
x
தினத்தந்தி 23 March 2021 2:29 AM IST (Updated: 23 March 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும்போது, வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அதிகாரியின் உத்தரவின்றி வாக்குச்சாவடிக்குள் செல்லக்கூடாது என நடமாடும் குழுவினருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர், 

கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடமாடும் குழுவின் பொறுப்பு அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசுகையில், நடமாடும் குழுவின் பொறுப்பு அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று, அதனை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
பொறுப்பு காவல் அலுவலர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தை சரியான நிலையில் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், குறித்த நேரத்திற்குள் பாதுகாப்பாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களை சென்றடைய ஆவன செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் பணி காவலர்கள் சரியாக உள்ளார்களா என அறிந்து, உடனே தனிப்பிரிவு, தேர்தல் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்கு மிக அருகில் உள்ள காவல் நிலையம், மருத்துவமனை, தேர்தல் பிரிவு, தனிப்பிரிவு அலுவலகங்களின் தொலைபேசி எண்களை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்து, தேவையான இடங்களில் பாதுகாப்பை உறுதிபடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறும்போது, வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அதிகாரியின் உத்தரவின்றி உள்ளே செல்லக்கூடாது.

தேர்தல் பணி

தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, தங்கள் கடமைகளை மறந்து அரசியல் கட்சி குறித்தோ, வேட்பாளர் பற்றியோ பேசக்கூடாது என்றார்.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாண்டியன், இளங்கோவன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, இன்ஸ்பெக்டர்கள் பாண்டிச்செல்வி, தமிழ்ச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story