அ.தி.மு.க., தி.மு.க.வை மாற்ற வேண்டும்


அ.தி.மு.க., தி.மு.க.வை மாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 23 March 2021 3:22 AM IST (Updated: 23 March 2021 3:22 AM IST)
t-max-icont-min-icon

ஒரு ஊழல் கட்சிக்கு மாற்று இன்னொரு ஊழல் கட்சியாக இருக்கக்கூடாது. எனவே அ.தி.மு.க., தி.மு.க.வை மாற்ற வேண்டும் என்று தஞ்சை பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசினார்.

தஞ்சாவூர்;
ஒரு ஊழல் கட்சிக்கு மாற்று இன்னொரு ஊழல் கட்சியாக இருக்கக்கூடாது. எனவே அ.தி.மு.க., தி.மு.க.வை மாற்ற வேண்டும் என்று தஞ்சை பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசினார்.
கமல்ஹாசன் பிரசாரம் 
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் சுந்தரமோகன்(தஞ்சை தொகுதி), ரெங்கசாமி(ஒரத்தநாடு தொகுதி), கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் திருமாறன் ஆகியோரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தஞ்சை ரெயிலடியில் நேற்று மாலை திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அரசியலில் நல்ல மாற்றத்தை உருவாக்க அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தை சீரமைக்க ஒரு வாய்ப்பை எங்களுக்கு கொடுக்க வேண்டும். விவசாயத்தை பிரதானமாக கொண்ட இந்த ஊரில் விளைபொருட்களை மேம்படுத்தி வியாபாரத்துக்கு உகந்ததாக மாற்றுவதற்கு தொழிற்சாலைகள் தேவை. விளைபொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றும்போதுதான் அதிக லாபம் கிடைக்கும்.
உரசி பார்க்க முயற்சி 
ஆனால் அதற்கான தொழிற்சாலை இங்கு இல்லை. இதுபோன்ற தொழிற்சாலைகளை உருவாக்கி படித்த இளைஞர்களுக்கு அவர்கள் வாழும் ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்க செய்வோம். இளைஞர்களை வேலை தேடும் தொழிலாளர்களாக அல்லாமல், மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் முதலாளிகளாக மாற்றுவதே எங்களது திட்டம்.
எனது நேர்மையை உரசிபார்க்க முயற்சி செய்கிறார்கள். நேர்மை என்பது ஒரு வாழ்க்கை முறை. தவறு செய்பவர்கள் செழிப்பாக வாழ்கிறார்கள். இங்கே பிரியாணி, குவாட்டர் பாட்டிலுக்காக யாரும் வரவில்லை. நேர்மையாக தங்கள் உழைப்பில் வாழ்பவர்கள் வந்து இருக்கிறார்கள்.
தமிழகத்தை மீட்டெடுக்க 
நம் நாட்டில் ஏராளமான தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் செயல்படுத்துவதற்கு மனமில்லை. அவர்களுக்கு பேராசைதான் அதிகமாக இருக்கிறது. தங்களுடைய தலைமுறையை பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர். இந்த நிலைமையை மாற்ற நாம் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்க வேண்டும். எனவே, இளைஞர்கள் தங்களது முதல் வாக்கை சுதந்திர போராட்டமாக மாற்ற வேண்டும். தமிழகத்தை ஊழலில் இருந்து மீட்டெடுக்கும் வாக்காக இருக்க வேண்டும்.
ஒரு ஊழல் கட்சிக்கு மாற்று, இன்னொரு ஊழல் கட்சியாக இருக்கக்கூடாது. இருவரையும் மாற்ற வேண்டும். இவர்கள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். உங்கள் சட்டை பையில் உள்ள பணத்தை எடுத்து அதையே அவர்கள் திருப்பி கொடுத்து வருவதுதான் உண்மை. எனவே பொறுமையாக சிந்தித்து நேர்மையாக வாக்களிக்க வேண்டும்.
சம்மட்டி அடி 
ஏழைகளின் வாழ்க்கையை முன்னேற்றுவதாக கூறி ஏழைகளை, ஏழைகளாகவே பாதுகாத்து வருகின்றனர். ஏழைகள், ஏழைகளாக இருந்தால் தான் அவர்களது வியாபாரத்துக்கு உதவும். தேர்தல் நேரத்திலும் பயன்படுவர் என்பதால்.. ஆனால் நாங்கள் தமிழர்களை ஏழை கோட்டில் இருந்து செழுமை கோட்டுக்கு மேல் உயர்த்த போகிறோம். செழுமை கோட்டுக்கு மேலே தமிழர்களை வைக்கும்போது கீழே சறுக்கி விழுந்தாலும் வறுமை கோட்டுக்கு கீழே செல்லமாட்டார்கள். அதற்கு நம் உறுப்பினர்களின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும். 
எனவே வாக்காளர்கள் டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்களியுங்கள். தமிழினத்தின் நலனுக்காக, தமிழகத்தின் நலனுக்காக முதல் அடி எடுத்து வைக்க வேண்டும். அது சம்மட்டி அடியாக இருக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இருந்து பல தொழில்நுட்பங்களை கொண்டு வந்து இந்தியா மட்டுமின்றி உலகத்தையே தமிழகத்தை திரும்பி பார்க்க வைக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story