சென்னிமலை அருகே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் உறுதி தேர்தல் புறக்கணிப்பை கைவிட பொதுமக்கள் முடிவு


சென்னிமலை அருகே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் உறுதி தேர்தல் புறக்கணிப்பை கைவிட பொதுமக்கள் முடிவு
x
தினத்தந்தி 23 March 2021 3:33 AM IST (Updated: 23 March 2021 3:33 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் தேர்தல் புறக்கணிப்பை கைவிடுவதாக பொதுமக்கள் முடிவு செய்தனர்

சென்னிமலை அருகே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் தேர்தல் புறக்கணிப்பை கைவிடுவதாக பொதுமக்கள் முடிவு செய்தனர்.
நடைபாதை ஆக்கிரமிப்பு
சென்னிமலை அருகே ஈங்கூர் ரோட்டில் உள்ளது மாரியப்பா நகர். இங்கு நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் நடைபாதையை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து விட்டதாக நீண்ட நாட்களாக மாரியப்பா நகர் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கூறி வந்தனர்.
மேலும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு உள்பட பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனுவும் கொடுத்து வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்தனர்.
தேர்தல் புறக்கணிப்பு முடிவு
இதுபற்றி அறிந்ததும் கடந்த 10-ந் தேதி வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மாரியப்பா நகர் பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் எந்த முடிவும் ஏற்படாததால் மீண்டும் தேர்தல் புறக்கணிப்பு செய்ய போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், ‘இந்த பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’ என்றனர்.
கைவிடுவதாக அறிவிப்பு
இதையடுத்து நேற்று முன்தினம் பெருந்துறை தாசில்தார் கார்த்தி மாரியப்பா நகருக்கு சென்று, நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததை உறுதி செய்தார். பின்னர் அவர் பொதுமக்களிடம் கூறும்போது, ‘ஆக்கிரமிப்பு குறித்த கோரிக்கையை மனுவாக கொடுங்கள். தேர்தல் முடிந்த பிறகு ஆக்கிரமிப்பை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
அதன்படி நேற்று மாரியப்பா நகரை சேர்ந்த பொதுமக்கள் பெருந்துறையில் உள்ள தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் தாசில்தார் கார்த்திைய சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் தாசில்தாரின் வேண்டுகோளை ஏற்று தேர்தலை புறக்கணிக்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தனர்.

Next Story