வீடுகளுக்கு முன்பு ஒட்டப்பட்டிருந்த தி மு க ஸ்டிக்கர் கிழித்து அகற்றம்


வீடுகளுக்கு முன்பு ஒட்டப்பட்டிருந்த தி மு க ஸ்டிக்கர் கிழித்து அகற்றம்
x
தினத்தந்தி 23 March 2021 4:03 AM IST (Updated: 23 March 2021 4:03 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வீடுகளுக்கு முன்பு ஒட்டப்பட்டிருந்த தி மு க ஸ்டிக்கர்களை மாநகராட்சி அதிகாரிகள் கிழித்து அகற்றினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்தனர்.

திருப்பூர்
திருப்பூரில் வீடுகளுக்கு முன்பு ஒட்டப்பட்டிருந்த தி மு க  ஸ்டிக்கர்களை மாநகராட்சி அதிகாரிகள் கிழித்து அகற்றினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்தனர்.
வாகனம் சிறைபிடிப்பு
பொது இடங்கள் மற்றும் வீடுகளுக்கு வெளியில் அரசியல் தலைவர்கள் மற்றும் சின்னங்கள் பொதுமக்களின் பார்வைக்கு தெரியும்படி இருந்தால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் செல்லாண்டியம்மன் துறை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டின் கதவில் வெளிப்புறமாக ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப்போராரு என்ற வாசகத்துடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
இதுகுறித்து புகார் வந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் கொண்ட குழுவினர் செல்லாண்டியம்மன் துறைக்கு நேற்று மதியம் விரைந்து சென்றனர். அங்கு வீடுகளின் கதவில் ஓட்டப்பட்டு இருந்த தி மு க ஸ்டிக்கர்களை கிழித்து அகற்றினார்கள். இதற்கு அப்பகுதியில் குடியிருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சியின் வாகனத்தை சிறைபிடித்து வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் நடத்தை விதி மீறல் காரணமாகவே இந்த ஸ்டிக்கர் அகற்றப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆன்லைன் மூலமாக புகார்
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஆன்லைன் மூலமாக புகார் வருகிறது. வீட்டின் வெளிப்புறமாக மக்களுக்கு தெரியும் வகையில் அரசியல் கட்சி தலைவர்கள் புகைப்படம் மற்றும் கட்சியின் ஸ்டிக்கர்கள் இருந்தால் அகற்றப்படும் என்றனர். அதிகாரிகள் ஒருபுறம் ஸ்டிக்கர்களை கிழித்து வந்தாலும் மறுபுறம் தொடர்ந்து ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாக புலம்பி வருகிறார்கள். 

Next Story